நோய்வாய்ப்பட்டு, வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை

நோய்வாய்ப்பட்டு, வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை

நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தகவல்களைப் பெற்று, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில், கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இனங்காணப்பட்டுள்ள கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களில் அதிக சதவீதமானோர், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது தொடர்பில் அறிவூட்டுவது குறித்தும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்ற முடியுமென, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர்
எடுத்துரைத்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளன. எனவே, குறித்த துறைகளில் விசேடமான எழுச்சியைக் காண முடியுமென, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
தெரிவித்தார்.

எந்தவொரு துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்குத் தடுப்பூசி ஏற்றும் எந்தவோர் இடத்திலும், இலகுவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

ஆயுர்வேத மத்திய நிலையங்களில் கொவிட் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடிந்துள்ளதாக, சுதேச மருத்துவத்துறை ஊக்குவிப்பு இராஜாங்க
அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இங்கு சிகிச்சைப் பெற்ற எவரும் மரணமடையவில்லை என்பதுடன், விரைவாகக் குணமடைந்திருப்பது பற்றிய விசேட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அமைச்சர் ரமேஷ் பத்திரன எடுத்துரைத்தார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, சுதேச ஔடதங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன, ரோஹித்த அபேகுணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, திளும் அமுனுகம, சிசிர ஜயக்கொடி, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.