ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும். இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர். சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும்.

இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும். இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.

கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது, அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும். இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புகிறேன்.

புனித அல் குர்ஆனையும் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமியர்களான உங்கள் அனைவருக்கும், இந்த ஹஜ் பெருநாள், இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய எனது வாழ்த்துக்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களின் வாழ்வை நிர்மாணிக்கும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமையாகும். பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்ட இஸ்லாமியர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் 'ஹஜ்' என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

'ஹஜ்' புனிதப் பயணத்தின் ஊடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே குறிக்கோளுடன் மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைந்து இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக ஒற்றுமையாக பிரார்த்திக்கின்றனர்.

அந்த வகையில் சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது. கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கையாகும். பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொவிட்-19 தொற்றுநோயை முற்றாக ஒழித்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுப்பட வேண்டும் என இன்றைய இந்த மகத்தான நாளில் நாங்கள் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

உங்களது அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக. அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி 

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமூகவாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையிலான ஒரு தெய்வீகப் பிணைப்பை ஏற்படுத்தும் மகிமை மிக்க ஒரு நன்னாளாக ஹஜ் திருநாள் அமையட்டும்.

இஸ்லாத்தில் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையாக இருக்கின்ற இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக புண்ணியமிக்க பூமிக்கு செல்வதையே ஹஜ் கடமையாக குறிப்பிடலாம்.

உலக வாழ் இஸ்லாமியர்கள் தியாகத்தையும் தயாளத் தன்மையையும் நினைவு கூர்வதாகவே கருத முடியும். இது சமத்துவத்தை அடிப்படையாக கட்டமைத்துள்ள சமூக விழுமிய நீதியைக் குறித்துக்காட்டுகின்றது. பேரழிவான ஒரு காலத்தில் சமத்துவம் என்பது முன்னெப்போதையும் விட தெளிவாக உணர முடிகின்றது.

புனித மக்காவை கேந்திரமாக கொண்டு முழு உலகையும் நோக்கி சொல்லப்படும் இந்தச்  செய்தி மிக முக்கியமானது. நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்துப் பலியிட எத்தனித்தமை தியாகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் தியாக நாளாக ஹஜ் திருநாள் முஸ்லீம்களால் ஆன்மீக விழுமிய செய்தியை உலகிற்கு கொண்டு சேர்ப்பதற்கான உன்னத நோக்கோடு கொண்டாடப்படுகின்றது.

இருப்பினும் தற்போதைய கொரோண தொற்று பரவலாக காணப்படுகின்ற இந்த நிலையில் மத வழிபாடுகளை ஆரவாரமாக நடாத்த முடியத மன நிலையில் இருக்கின்றோம். உங்கள் உள்ளங்களை வழிபாட்டுத் தலங்களாக மாற்றிக்கொண்டு செயல்படுவதற்கு இந்த தொற்று நிலை எம்மை மாற்றியிருப்பதோடு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பெருநாள் கொண்டாட்டங்களை நடாத்துமாறு பணிவாக கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கையின் முஸ்லிம்கள், உலகெங்கிலும் உள்ள சக முஸ்லிம் சகோதரர்களுடன் சேர்ந்து ஹஜ் பெருநாள் இன்று கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதமான துல் ஹஜ் மாதத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுகிறது.

மனித குலத்தை உருவாக்கிய சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு சேவை செய்யும் விதமாக முஸ்லிம்களின் தியாகத்தையும் பக்தியையும் இது குறிக்கிறது. முஸ்லிம்களின் ஐந்து அத்தியாவசிய கடமைகளில் ஒன்றான ஹஜ் செய்வது என்பது பணக்காரர், ஆரோக்கிய மற்றும் அனைத்து சராசரி மக்களுக்கும் அவர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹஜ் செய்ய முடியாதவர்கள், தங்கள் செல்வத்தை தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கி உதவ முடியும் என்பதை இஸ்லாம் எமக்கு கற்பிக்கிறது. இஸ்லாத்தின் போதனைகளின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வோம், இது அனைத்து சமூகங்களிடையேயான சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது மற்றும் அனைத்து மக்களிடையே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வாழ்வதற்கு ஊக்குவிக்கவும் செய்கிறது.

இன்று ஹஜ் தீகை திருநாளை கொண்டாடும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இறைவன் அளித்த பொறுமையினூடாக சகிப்புத் தன்மையைக் கையாளும் அதேவேளையில், நீதி, நியாயம் நிலைநாட்டப்படுவதற்குப் பாடுபடவும்  இந்த நன்னாளில் திட சங்கற்பம் பூணுவோம்.

இலங்கையிலும், உலக நாடுகளிலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் முஸ்லிம்கள்  'ஈதுல் அழ்ஹா 'எனப்படும் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இவ்வேளையில்,அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் பெருநாள்,  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நியதிப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எங்களை வந்தடைந்திருக்கின்றது. 

ஒரு கொடிய தொற்று நோயின்   காரணமாக  பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கூட சன்மார்க்க ஈடுபாட்டையும்,இறை நம்பிக்கையையும்இழந்து விடாமல் எங்களைப் பாதுகாத்த இறைவனுக்கு  நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

மீண்டும் இறை இல்லங்களில் வணக்க வழிப்பாடுகள் நடைபெறுகின்ற போதிலும், சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நாம் அனைவரும் நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையிலிருந்து அனைத்து இன மக்களும் மீண்டு வருவதற்காகப்  பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
 
நபி இப்ராஹீம் (அலை) மற்றும்  இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று உண்மையை நாங்கள்  இந்தத் தியாகத் திருநாளின் போது நினைவு கூர்கின்றோம்.

தியாகத்தின் நினைவை மாத்திரம் இந்தப் பெருநாள்  தினத்தில் இரை மீட்டிக் கொள்பவர்களாக இல்லாமல், எங்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்வாதாரத்திற்காக, வறுமையில் சிக்குண்டு சிரமப்படுகின்றவர்களின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும்.

பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்களின் காரணமாக பலர் இன்று சிறையில் வாடுகின்ற நிலையில் ,அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் நாங்கள் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குற்றமிழைக்காதவர்களை கூட நாட்டுப்பற்று அற்றவர்களாகவும் ,விரோதிகளாகவும்  வலிந்து வம்புக்கிழுக்கின்ற ஒரு புதிய கலாசாரம் மிக மோசமாக இந்நாட்டில் பரவியிருக்கின்றது.

இறைவன் எங்களுக்கு அளித்த பொறுமையினூடாக, துன்புறுத்தல்களை தாங்கிக் கொண்டு, சகிப்புத் தன்மையைக் கையாளும் அதேவேளையில், நீதி, நியாயம் நிலைநாட்டப் படுவதற்குப் பாடுபடவும்  இந்த நன்னாளில் திட சங்கற்பம் பூணுவோமாக.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நமது நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக இந்தப் பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்திப்போம். தொடர்ந்து மூன்றாவது வருடம் நாம் நிம்மதியாக ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

2019 இல் சஹ்ரானின் மிலேச்சத்தனமான குண்டு வெடிப்பினாலும், அதன் பின் எற்பட்ட சூழ்நிலைகளினாலும் நாம் மிகவும் அச்சமடைந்த நிலையில் இருந்தோம். அதனால் அந்த வருடம் சந்தோசமாக பெருநாள் கொண்டாட முடியவில்லை.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு, பயணத்தடை, தனிமைப்படுத்தல் போன்றனவற்றால் நாம் வீடுகளுக்குள் முடங்கி இருந்தோம். அதனால் பலர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோம். எனவே, இந்த ஆண்டுகளிலும் திருப்தியான முறையில் பெருநாள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு மேலதிகமாக முஸ்லிம்கள் என்ற வகையில் ஜனாஸா எரிப்பு, காதி நீதிமன்றத்தடை, மத்ரசா தடை என இன்னும் பல பிரச்சினைகள் எமக்கு எற்படுத்தப்பட்டன. இதனால் நாம் பெருங்கவலையோடு வாழ்ந்து வந்தோம்.

இதனைவிட சகல பொருட்களினதும் விலை உயர்வினால் இந்நாட்டிலுள்ள சகல மக்களினதும் வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணப்பட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே இப்போது நாங்கள் மூன்றாவது வருடமாக மிகவும் எளிமையான முறையில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் இஸ்லாமிய வரலாற்றில் தியாகத் திருநாள். இப்ராஹீம் நபி அவர்களது குடும்பத்தினரது தியாகம் இப்பெருநாள் தினத்தில் நினைவு கூரப்படுகின்றது. ஹஜ்ஜுக் கடமைக்காக புனித மக்கா நகர் செல்லும் ஹாஜிகள் அனைவரும் இந்த வரலாற்று இடங்களை நேரில் தரிசித்து நல்லமல்கள் செய்து வருவார்கள்.

இந்தக் கொரோனா பெருந்தொற்றினால் ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியம் கூட கடந்த இரு வருடங்களாக நமது மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்த நிலைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். சகல மக்களும் மிகவும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். இதற்காக நாம் அனைவரும் மனமுருகிப் பிரார்த்திப்போம்.