போலிச் செய்தி தொடர்பான சட்டமூலத்தின் வரைபு இரு வாரங்களில் வெளியிடப்படும்

போலிச் செய்தி தொடர்பான சட்டமூலத்தின் வரைபு இரு வாரங்களில் வெளியிடப்படும்

றிப்தி அலி

இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தின் வரைபு இன்னும் இரு வாரங்களில் பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

'முற்போக்கான நாளையை நோக்கிய வெகுஜன ஊடகம்' என்ற தொனிப்பொருளில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் 'டுவிட்டர்' ஊடாக ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று (04) புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இணையத்தளம் ஊடாக பொய்யான தகவல்களை பிரச்சாரப்படுத்துதல் கடும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளன. அது மாத்திரமல்லாமல், சமூகங்களிடையே பிரிவினையினை ஏற்படுத்துவதற்கும், வெறுப்புணர்வினை பரப்புவதற்கு போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

போலிச் செய்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல நாடுகளில் ஏற்கனவே சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கையிலும் அது போன்ற சட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளது.

இந்த போலிப் பிரச்சாரங்கள் காரணமாக நிகழும் பாதிப்புகளிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பொருட்டே புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம். மாறாக இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது.

குறித்த சட்டமூலத்தினை தயாரிப்பதற்கு வெகுசன ஊடக அமைச்சர் என்ற அடிப்படையில் நானும்,  நீதி அமைச்சர் அலி சப்ரியும் இணைந்து கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி சமர்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கமைய, குறித்த சட்ட மூலத்தினை வரையும் நடவடிக்கையில் சட்ட வரைஞர் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது. இன்னும் இரு வாரங்களில் குறித்த சட்ட மூலத்தின் வரைபு ஊடக அமைச்சிற்கு கையளிக்கப்படும்.

இதன் பின்னர் குறித்த வரைபினை உத்தியோகபூர்வமாக  அமைச்சு வெளியிடும். இந்த வரைபு தொடர்பில் பொதுமக்கள் சிபாரிசுகளை முன்வைக்க முடியும். அது மாத்திரமல்லாமல், இந்த வரைபு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டத்தினை விரைவாக பாரளுமன்றத்தில் நிறைவேற்றாது, இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருடன் பாரியளவில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த கலந்துரையாடல்களின் ஊடாக அனைத்து தரப்பினருடைய கருத்துக்களையும் உள்ளடக்கி, எந்தவித பிரச்சினைகளுமின்றி இந்த சட்ட மூலம் இறுதி செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்" என்றார்.