பசிலுக்கு வாக்கு சேகரிக்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்

பசிலுக்கு வாக்கு சேகரிக்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்

றிப்தி அலி

இலங்கையில் "ஒரே நாடு, ஒரே சட்டம்" என கோஷத்தினை முன்வைத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஆட்சி பீடமேறியது.

எனினும் 20 மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் குறித்த கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோஷத்தினை இதுவரை நிறைவேற்ற முடியாதுள்ளது. பல சந்தர்ப்பங்களில் "ஒரே நாடு, ஒரே சட்டம்" என்ற கோஷத்தினை மீறும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டமை சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தன.

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதில் இந்த அரசாங்கம் தற்போது பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன. அது மாத்திரமல்லாமல் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் அனைத்து வகையான பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன.

இதனால் 67 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய இந்த அரசாங்கத்தின் செல்வாக்கு குறைவடைவதுடன் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பாரிய விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பங்களில் மக்களை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்காக முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்துடன் நேரடியாக தொடர்புபடும் வகையான தீர்மானங்களை ஆளும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

நிகாப் மற்றும் புர்கா ஆகியவற்றுக்கு தடை, மாடறுத்தலுக்கு தடை, காதி நீதிமன்ற முறையினை இல்லாமலாக்கல், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் ஆகியனவற்றினை இதற்கான உதாரணங்களாக குறிப்பிட முடியும்.

இவை தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய சட்ட வரைஞர் திணைக்களம் தற்போது சட்ட வரைபினை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, "முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் நிச்சயம் திருத்தம் மேற்கொள்ளப்படும்" என நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

எனினும், இதற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில்  விரைவில் கொண்டுவரப்படவுள்ள இந்த சட்டங்கள் தொடர்பில்  எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சியுடன் நெருங்கி செயற்படும் ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தீர்மானங்களை மீறி குறித்த கட்சியினை சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு கட்சிகள் ஆதரவாளர்களினால்  இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பலைகள் தோன்றின. இதற்கு முடிவு கட்டும் வகையில் இவர்கள் ஏழு பேரும் கட்சி போதங்களை மறந்து  ஒரு அணியாக செயற்படத் தொடங்கினர்.

இவர்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பழீல் ஆகியோரும் இணைந்து செயற்படுகின்றனர். இவர்கள் ஒன்பது பேரும் இணைந்தே அரசாங்க தரப்பினருடனான பேச்சுக்களை முன்னெடுக்கின்றனர். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனேயே இவர்கள் அனைவரும் ஒரு அணியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக செயற்பட்ட ஏ.பீ.எம். அஷ்ரபினை இடமாற்றும் விடயத்திலும் மேற்குறிப்பிட்ட ஒன்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டதாகவும் இப்போது தெரிய வருகின்றது.

இது போன்றே, கொழும்பினை தளமாகக் கொண்டு செயற்படும் முஸ்லிம் அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிநிதிகளை மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் கொழும்பில் சந்தித்து முஸ்லிம் சமூகம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

எனினும், இந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யார் தலைமைத்துவம் வழங்குவது என்பது தொடர்பில் நீண்ட இழுபறியொன்று அவர்களிடையே காணப்படுகின்றது.

இதேவேளை, இவர்களில் சிலருக்கு விரைவில் இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதனாலேயே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் (அரசாங்கத்திற்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தாது) இவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதனை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒன்பது பேரில் ஐந்து பேர் சிரேஷ்ட உறுப்பினர்களாவர். இவர்கள் ஐந்து பேருக்கும் அமைச்சுப் பதவியினை அரசாங்கம் ஒருபோதும் வழங்காது. இதனால் கிடைக்கும் ஒன்றையோ அல்லது இரண்டையோ யார் பெறுவது என்பது தான் இங்குள்ள பிரச்சினையாகும்.

இவ்வாறான நிலையிலேயே,  "20க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அமைச்சர் பதவியினை பெறமாட்டோம்" என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் ஊடாக குறித்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை கண்டுள்ள இவர்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு ஆதரவான பிரச்சாரங்களை தற்போது முஸ்லிம் சமூகத்தில் ஆரம்பித்துள்ளனர்.  

மேற்படி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அபிவிருத்தி பணிகள் தொடர்பான விளம்பரப் பதாதைகளில் பசில் ராஜபக்ஷவின் புகைப்படத்தையே பெரிய அளவில் பிரசுரிக்கின்றமை இதற்கு ஓர் உதாரணமாகும்.

குறிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ஷவிற்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையான முஸ்லிம் வாக்குளை பெற்றுக்கொடுப்பதே இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் இலக்கு என்றும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  

மேற்படி விடயங்களை அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற முஸ்லிம் அமைப்புக்களுடனான சந்திப்பின் போது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன் அவர்களின் எதிர்கால தந்திரோபாய திட்டங்கள் தொடர்பிலும் விளக்கியுள்ளனர். அத்துடன் முஸ்லிம் அமைப்புக்கள் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனாலேயே, இவர்கள் முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு பஸில் ராஜபக்ஷவிற்கு ஆதரவான பிரச்சாரத்தினை முன்னெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன. அடுத்த ஜனாதிபதியைப் பற்றி சிந்திக்கின்ற நிலைமையில் இன்று நாடு இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் உலகில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெறும் என்று யாராளும் கூற முடியாது.

அவ்வாறான நிலையில் இவர்கள் சமூகப் பிரச்சினைகளை மறந்துவிட்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை ஆரம்பித்திருப்பது கவலைக்குரியதாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சிகனை முன்வைத்து பாராளுமன்ற சென்ற இவர்கள், ஒருபோதும் அது பற்றி வாய் திறக்காது ஆளும் அரசாங்த்தினையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதையே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். இது முஸ்லிம் அரசியலை மென்மேலும் பலவீனப்படுத்தும் அன்றி ஒருபோதும் பலப்படுத்தாது.