ஜப்பானின் அனுசரணையில் யுனிசெபின் குளிர்ச்சங்கிலி உபகரணங்களின் இரண்டாம் தொகுதி கையளிப்பு

ஜப்பானின் அனுசரணையில் யுனிசெபின் குளிர்ச்சங்கிலி  உபகரணங்களின் இரண்டாம் தொகுதி கையளிப்பு

கொவிட்-19 தொற்று நோய்த்தடுப்பு உள்ளடங்கலாக இலங்கையின் நோய்த்தடுப்பு சேவைகளின் வழங்கலை பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் அணுசரனையில் யுனிசெப் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்ச்சங்கிலி உபகரணங்களின் இரண்டாவது தொகுதியை சுகாதார அமைச்சு இன்று (25)பெற்றுக்கொண்டது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாவது தொகுதியில் 500 தடுப்பூசி கொள்கலன்கள் சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டன. இரண்டாவது தொகுதியில் 750 தடுப்பூசி கொள்கலன்கள், 300 குளிர்ப் பெட்டிகள், 100 பனி உறைநிலை குளிர் சாதனப்பெட்டிகள், 140 குளிர்சாதனப் பெட்டி வெப்பநிலை கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளின் வினைதிறன்மிக்க முகாமைத்துவத்துக்காக அன்ட்ரோய்ட் தத்தல்கள் (Android Tablets) என்பன உள்ளடங்குகின்றன.

தடுப்பூசியின் தரம் மற்றும் வினைத்திறனை பேணும் விதத்தில் போதிய வெப்பநிலையுடன் தேவையான களஞ்சியப்படுத்தல் நிலைமையில் தடுப்பூசிகளை வைத்திருக்க இக் குளிர்ச்சங்கிலி உபகரணங்கள் முக்கியமானவை.

இப்பொருட்கள் இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி  கிரிஸ்டியன் ஸ்கூக் ஆகியோரால் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இப்பொருட்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

"தடுப்பூசியினால் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை சுகாதார பராமரிப்பின் முக்கியமானதொரு தூண் நோய் எதிர்ப்புத் திறனூட்டலாகும்.

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இவ்வுபகரணங்கள் தடுப்பூசிகளின் வழங்கலை பலப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஜப்பான் அரசாங்கம் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்தின் நீண்டகால பங்காளியாக பல்லாண்டுகளாக வழங்கிவரும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டொத்துழைப்பினை நான் பெரிதும் மெச்சுவதோடு, யுனிசெப் நிறுவனம் அத்தகைய முக்கியமான பொருட்களை கொள்வனவுசெய்து வழங்கி இலங்கையின் நோய் எதிர்ப்புத் திறனூட்டல் முறைமைக்கு ஆற்றும் வகிபாகத்தையும் மனதார ஏற்று நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.  

மேலும் அங்கு உரை நிகழ்த்திய தூதுவர் சுகியாமா,

"இன்று வழங்கப்படுகின்ற குளிர்ச்சங்கிலி உபகரணங்கள் தடுப்பூசிகளை போதியளவு களஞ்சியப்படுத்தி அவற்றை மக்களுக்கு பாதுகாப்பாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு பேருதவியாக அமையுமென ஜப்பான் அரசாங்கம் நம்புகின்றது.

இதற்கு மேலதிகமாக, ஜப்பான் அரசாங்கம் யுனிசெப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஜப்பான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அஸ்ட்ராஸெனிகா  தடுப்பூசிகளுள் கிட்டத்தட்ட 1.45 மில்லியன் டோஸ்களை கொவெக்ஸ் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

எனவே, வழங்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் குளிர்ச்சங்கிலி உபகரணங்கள் இலங்கையின் தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்துவதோடு கொவிட்-19 பரவலை தடுப்பதற்கும் பங்களிப்பு செய்யும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.  

இலங்கை அரசாங்கம் சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி இடப்படுத்தல் திட்டத்தின் கீழ் முன்னுரிமைப்படுத்தப்பட்ட மக்கட் தொகைக்கு கொவிட்-19 தொற்றுக்கெதிராக தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகின்றது.

மேலும் அவ்வைபவத்தில் கருத்துத்தெரிவித்த யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி  கிரிஸ்டியன் ஸ்கூக்,

"பலமான நோய் எதிர்ப்புத் திறனூட்டல் முறைமையின் முதுகெலும்பு குளிர்ச்சங்கிலி முறைமையாகும். அத்தகைய முக்கியமான உபகரணத் தொகுதியை ஜப்பான் அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.

யுனிசெப் நிறுவனம் அதன் பங்காளர்களுடன் இணைந்து கொவிட்-19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசிகள் மாத்திரமல்லாது தடுப்பூசியினால் தடுக்கக்கூடிய நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளை கொள்வனவுசெய்து, களஞ்சியப்படுத்தி அவற்றை மக்களுக்கு வழங்கி ஒட்டுமொத்த நோயெதிர்ப்புத் திறனூட்டல் திறனை பலப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குகின்றது.

அத்துடன், கொவிட்-19 தொற்று நோயுடன் ஏனைய நோய்கள் பரவுவதை தடுப்பதற்கு தற்போது செயற்படுத்தப்படுகின்ற சிறுவர்களுக்கான தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டங்களை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்" என குறிப்பிட்டார்