பலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார் வெளிநாட்டு அமைச்சர்

பலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார் வெளிநாட்டு அமைச்சர்

பலஸ்தீன அரசிற்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,  தற்போதுள்ள நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டாரிற்கும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே வெளிநாட்டு அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தை ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக நிறுவி கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராக பணியாற்றியதாக அமைச்சர் பீரிஸ் விவரித்தார்.

பலஸ்தீனத்தின் பிரச்சனைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகவும், ரமல்லாவில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பெயரில் ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்கில் பலஸ்தீனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டியதுடன், அரசியல் நோக்கங்களுக்காக நாடுகளைத் தனிமைப்படுத்துவதை அவர்கள் எதிர்த்த அதேவேளை, தமது தேசிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நாடுகளை அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினர்.

பலஸ்தீன மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவையும், சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின் அடிப்படையில் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசுக்கான உரிமையையும் அமைச்சர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளுக்காக அதிகமான ஒத்துழைப்பு வேண்டும் என்ற வலுவான உறுதிப்பாட்டை இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.