பாபக்கர் பள்ளி விவகாரத்திற்கு தீர்வு கிட்டுமா?

பாபக்கர் பள்ளி விவகாரத்திற்கு தீர்வு கிட்டுமா?

றிப்தி அலி

தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு அருகிலுள்ள பள்ளிவாசலுடனான 77 பேர்ச் காணியை அதன் நிர்வாகிகள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக அப்பள்ளிவாசலின் ஜமாத்தாரால் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நாம் அண்மையில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்ததுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களையும் வினவினோம். அதனடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

"சவூதியைச் சேர்ந்த தனந்தரான பாபக்ரினால் வக்பு செய்யப்பட்ட காணியை நிர்வாகிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாபக்கர் ட்ரஸ்ட் இன்று வரை வக்பு நியாயாதிக்க சபையில் பதிவுசெய்யப்பட்டவில்லை" என பாபக்கர் ஜும்ஆப் பள்ளிவாசல் ஜமாஅத்தாரின் பேச்சாளர் என அடையாளப்படுத்தும் பொறியியலாளர் எம். சஹீம் நஸ்ருதீன் தெரிவித்தார்.

இந்த ட்ரஸ்டினை வக்பு நியாயாதிக்க சபையில் பதிவுசெய்தால்,  குறித்த காணியினை ஒருபோதும் விற்பனை செய்ய முடியாது. இதனாலேயே வக்பு நியாயாதிக்க சபையில் குறித்த பதிவினை மேற்கொள்ளாமல் கடந்த  எட்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்லாமல், இந்த காணிக்காக எழுதப்பட்ட ட்ரஸ்ட் ஒப்பந்தத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கையாளர்களுக்கு இதை விற்பனை செய்ய, பகுதிகளாக விற்பனை செய்ய, அடகு வைக்க, கைமாற்றம் செய்ய, பரிசளிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

"குறித்த ட்ரஸ்ட் ஒப்பந்தத்தில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதனை பயன்படுத்தி பள்ளிவாசலுக்காக வக்பு செய்யப்பட்ட காணியினை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். ட்ரஸ்ட் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் பாபக்கர் ட்ரஸ்டின் வருடாந்த மாகாநாடுகள் எதுவும் எமது பள்ளிவாசலில் இதுவரை நடைபெறவில்லை" என பொறியியலாளர் சஹீம் மேலும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசல், தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு அருகிலுள்ள இல. 14, கல் விகார பிளேஸ் எனும் முகவரியிலுள்ள 77 பேர்ச் காணியில் அமையப் பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான றியாதினைச் சேர்ந்த தனவந்தரான உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கர் என்பவரின் நிதியின் ஊடாக 1997.08.13ஆம் திகதி கொள்வனவு செய்யப்பட்டு ஜம்இய்யதுஷ் ஷபாப் என்று அழைப்பப்படுகின்ற Association of Muslim Youth Sailan அமைப்பின் கீழ் இக்காணி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியின் முகவரியிலேயே கடந்த 1999.06.10ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இந்நிறுவனம் பதிவுசெய்யப்படுகின்றது.

இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தின் பாடசாலைக் கல்வி மற்றும் மார்கக் கல்வி ஆகியற்றினை சிறப்பான முறையில் முன்னெடுக்கும் நோக்கிலேயே குறித்த காணி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002.07.24ஆம் திகதி குறித்த காணியின் உரிமம் உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கரின் பெயருக்கு மாற்றப்படுகின்றது. அத்துடன் இக்காணியில் பள்ளிவாசல் மற்றும் முன்பள்ளி பாடசாலை ஆகியன செயற்படுவதாக தெஹிவலை - கல்கிசை மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இக்காணிக்கான மதீப்பீட்டு வரி விலக்கு பெறப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காணியின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளராக Association of Muslim Youth Sailan இன் பெயரே கடந்த 2017.04.05ஆம் திகதி வரை தெஹிவலை - கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது இக்காணியின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளராக உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கரின் பெயரே மாநகர சபையின் ஆவணங்களில் காணப்படுகின்றது.

இதேவேளை, இக்காணியினை நிர்வகிப்பதற்கான அங்கீகாரமளிக்கப்பட்ட நபர்களாக ஜம்இய்யதுஷ் ஷபாபின் முக்கியஸ்தர்களான மௌலவி எம்.எஸ்.எம். றசீட்  மற்றும் சபர் ஷாலி ஆகியோர் விசேட அட்டோனி தத்துவத்தின் ஊடாக கடந்த 2006.01.20ஆம் திகதி உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கரினால் நியமிக்கப்படுகின்றனர்.

பின்னர், இக்காணிக்கான பாபக்கர் ட்ரஸிடினை உருவாக்குவதற்கான பொறுப்பு மேற்படி இருவருக்கும் கடந்த 2015.01.25ஆம் திகதி விசேட மற்றும் வரையறுக்கப்பட்ட அட்டோனி தத்துவத்தின் மூலம் பாபக்கரினால் வழங்கப்படுகின்றது.

இதனையடுத்து, இக்காணியினை நிர்வாகிப்பதற்காக ஆறு பேரைக் கொண்ட பாபக்கர் ட்ரஸ்ட் கடந்த 2015.03.12ஆம் திகதி நிறுவப்படுகின்றது. மௌலவி எம்.எஸ்.எம். றசீட், சபர் ஷாலி, மௌலவி எம்.எஸ்.எம். தாசீம், சட்டத்தரணி சீத்திக் ஹாஜா முஹைதீன்;. அக்ரம் எம். அமீர் மற்றும் எம்.எச். ஹின்ஸி முஹம்மத் ஆகியோரே இந்த ட்ரஸிடின் உறுப்பினர்களாவர். இதில் சபர் ஷாலி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காலமானார்.  

கடந்த 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் இக்காணியில் சிறிய பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டு ஐவேளை தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஜும்ஆ தொழுகையும் இங்கு நடைபெறுகின்றது.

இப்பள்ளிவாசல் கட்டிடம் ஜமாஅத்தாரின் சுமார் ஆறு மில்லயின் ரூபா மற்றும் ஜஇய்யதுஷ் ஷபாபின் நிதிப் பங்களிப்பு ஆகியவற்றின் ஊடாக விரிவாக்கம் செய்யப்படுகின்றது.

தற்போது இப்பள்ளிவாசலில் இரண்டு மௌலவிகள் உட்பட மூவர் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கான மாதாந்த சம்பளம் ஜம்இய்யதுஷ் ஷபாபினாலேயே வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த பள்ளிவாசலை வக்பு சபையில் பதிவுசெய்வதற்கான நடவடிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு ஜமாஅத்தாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போதே ஜமாஅத்தினருக்கும் ஜம்இய்யதுஷ் ஷாபாபிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு இன்று வரை தொடர்கின்றது.

"இது பள்ளிவாசல் அல்ல; சென்டரேயாகும்" என்று ஜம்இய்யதுஷ் ஷபாப் கூறுகின்றமையினாலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பள்ளிவாசலின் ஜமாத்தினர் ஆறு பேர் இணைந்து பாபக்கர் ட்ரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக 2018.05.22ஆம் திகதி கல்கிசை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கில் கோரப்பட்ட இடைக்கால தடை உத்தரவு 2019.04.22ஆம் திகதி மாவட்ட நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டதுடன், இக்காணிக்கோ அல்லது ட்ரஸிற்கோ மூன்றாம் தரப்பினர் உரிமை கோர முடியாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் தற்போது வரை இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இப்பள்ளிவாசலை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் கடந்த மே 18ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்திடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றது.

எனினும், இதற்கு எந்தப் பதிலும் திணைக்களத்தினால் வழங்கப்படமையினால் கடந்த ஓகஸ்ட் மாதம் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்று ஜமாத்தார்கள் ஒன்பது பேர் சேர்ந்து தாக்கல் செய்துள்ளனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அதன் இரண்டு உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பள்ளிவாசலை பதிவுசெய்யவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியினை விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பாபாக்கர் ட்ர்ஸ்டின் உறுப்பினர்களினால் இடையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், பள்ளிவாசலை பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால், குறித்த வழக்கினை வாபஸ் பெறாமல் முடிவுறுத்தல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாபக்கர் ஜும்ஆப் பள்ளிவாசல் எனும் கடிதத் தலைப்பில் விரிவான கடிதமொன்று வக்பு சபையின் தலைவருக்கு கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி குறித்த பள்ளிவாசல் ஜாமத்தார் சார்பில் பொறியியலாளர் எம். சஹீம் நஸ்ருதீன் கையொழுத்திட்டு அனுப்பியுள்ளார்.  

இதற்கு பதலளிக்கும் வகையிலான கடிதங்கள் பாபக்கர் ட்ரஸிடினால் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் வக்பு சபையின் தலைவர் ஆகியோருக்கு கடந்த ஒக்டோபர் 23ஆம் அனுப்பப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக இப்பள்ளிவாசலுக்குள் மூன்றாம் தரப்பொன்று நுழைய முயற்சிப்பதாகவும், அவர்கள் சட்ட ரீதியற்ற வகையில் இதன் நிர்வாகிகளாக வர முயற்சிப்பதாகவும் குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பள்ளிவாசலை பதிவுசெய்யவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் திணைக்களத்தின் பணிப்பாளரரினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வக்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வக்பு சபை  கடந்த ஒரிரு மாதங்களாக கூடாமையினால் இப்பள்ளிவாசலின் பதிவு தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் பாபக்கர் ட்ரட்ஸின் கீழுள்ள குறித்த காணியினை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக குறித்த ட்ரட்ஸின் உறுப்பினரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளருமான  எம்.எஸ்.எம். தாசீம் மௌலவி தெரிவித்தார்.

ஜம்இய்யதுஷ் ஷாபாபின் ஊடாக நாடளாவிய ரீதியில் பல பள்ளிவாசல்களை கட்டிய நாம், எதற்கு இந்த சென்டரிலுள்ள பள்ளிவாசலை மூட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

"இந்த சென்டரை வக்பு சபையில் பதிவுசெய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம். எனினும், காணியினை வேறாகவும், சென்டரை வேறாகவும் பதிவு செய்ய வேண்டும் என எமக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு காணியினை வக்பு செய்தவரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை" என தாசீம் மௌலவி குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலையீட்டினை அடுத்து எமது ட்ரஸ்டினை வக்பு நியாயாதிக்க சபையில் பதிவுசெய்வதற்கான நடவடிக்கையினை தற்போது முன்னெடுத்துள்ளோம். சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனினால் இதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

"எவ்வாறாயினும், குறித்த காணியில் அடுத்த தலைமுறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பள்ளிவாசல் உட்பட ஐந்து மாடிகளைக் கொண்ட  சென்டரொன்றினை  நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தோம். இதற்கு தேவையான அனுமதிகளை பெறுவது மிகவும் சிரமமாகவுள்ளது. இதனாலேயே குறித்த கட்டிட நிர்மாணத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த அனுமதி கிடைக்கப் பெற்றால், நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் சென்டர் நிர்மாணத்திற்கான பணிகளை உடனடியாக ஆரம்பித்துவிடுவோம் என தாசீம் மௌலவி மேலும் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசல் விவகாரம் மென்மேலும் இழுத்தடிக்கப்பட்டு முரண்பாடுகளை வளர்க்காது, சுமூக தீர்வை எட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முயற்சிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.