சமாதான நீதவான்கள், சத்திய ஆணையாளர்கள் தேசிய இலச்சினையினை பயன்படுத்த முடியாது: நீதி அமைச்சு

சமாதான நீதவான்கள், சத்திய ஆணையாளர்கள் தேசிய இலச்சினையினை பயன்படுத்த முடியாது: நீதி அமைச்சு

றிப்தி அலி

சமாதான நீதவான்கள் மற்றும் சத்திய ஆணையாளர்கள் ஆகியோர் ஒருபோதும் நாட்டின் தேசிய இலச்சினையினை பயன்படுத்த முடியாது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக சமாதான நீதவான்கள், சத்திய ஆணையாளர்களின் இறப்பர் முத்திரையிலோ, கடித தலைப்பிலோ  நாட்டின் தேசிய இலச்சினையினை பயன்படுத்த முடியாது எனவும் அமைச்சு தெரிவித்ததது.

இது தொடர்பில் நீதி அமைச்சினால் சமாதன நீதவான்களுக்காக வெளியிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வழிகாட்டியின் 5ஆவது பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதனை மீறி பல சமாதான நீதவான்கள், சத்திய ஆணையாளர்களினால் தொடர்ச்சியாக நாட்டின் தேசிய இலச்சினை பயன்படுத்துவதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பில் தகவல்களை பெறும் நோக்கில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சிற்கு தகவல் கோரிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தோம்.

இதற்கு அமைச்சின் தகவல் அதிகாரியும் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட உதவி செயலாளருமான திருமதி எம்.எம். அலிப் வழங்கிய பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டின் தேசிய இலச்சினையினை பயன்படுத்துகின்ற சமாதான நீதவான்கள், சத்திய ஆணையாளர்களுக்கு எதிராக எழுத்து மூல முறைப்பாட்டினை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சிற்கு மேற்கொள்ள முடியும்.

முறைப்பாட்டினை அடுத்து எமது அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ள முடியும். விசாரணை அறிக்கையின் பிரகாரமே அவர்களுக்கான தண்டனை தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

எனினும், இதற்கான தண்டைனைகள் தொடர்பிலான எந்தவொரு சட்டமோ, வர்த்தமானி அறிவித்தலோ, சுற்றுநிரூபமோ இதுவரை இல்லை" என்றார்.