கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி; முன்னாள் மேயருக்கு நேரடித் தொடர்பா?

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி; முன்னாள் மேயருக்கு நேரடித் தொடர்பா?

றிப்தி அலி

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுமார் 1 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான நிதி மோசடியுடன் முன்னாள் மேயர் ஏ.எம். றக்பிற்கு நேரடித் தொடர்புள்ள விடயம் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீத் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்காவிற்கு கணக்காய்வாளர் றசீதினால் கடந்த மார்ச் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையிலேயே  முன்னாள் மேயரின் தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.எம். முஜாஹித் மற்றும் சின்டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.கே. காமிஸ் கலீஸ் ஆகியோருக்கும் இந்த நிதி மோசடியுடன் நேரடித் தொடர்புள்ள விடயம் விசாரணையின் போது பிடிபட்டுள்ளதாவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஏ.எச்.எம். தஸ்தீக் மற்றும் தற்போதைய கணக்காளர் கே.எம்.றியாஸ் உள்ளிட்ட நான்கு உத்தியோகத்தர்கள் இந்த மோசடிக்கு பொறுப்புக்கூற வேண்டியுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு பொருத்தமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் றகீபின் நேரடிக் கண்கானிப்பின் கீழ் கல்முனை மாநகர சபைக்கான வருமான சேகரிப்பு மென்பொருள்  சின்டெக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனமும், மென்பொருளும் முன்னாள் மேயரினாலேயே கல்முனை மாநகர சபையின் வருமானப் பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனத்தின் உரிமையாளரினால் மாநகர சபையின் வருமானப் பகுதியிலுள்ள எட்டு உத்தியோகத்தர்களுக்கு இந்த மென்பொருளை பயன்படுத்துவது தொடர்பிலான விசேட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சின் போது வேலைத் தொழிலாளியான முஜாஹித்திடமே வருமான சேகரிப்புக்கான மென்பொருளின் அனைத்துப் பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மென்பொருளினை நேரடியாக பயன்படுத்துவதற்கான கடவுச்சொல் சின்டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு மேயருடன் இணைந்து வழங்கப்பட்டுள்ளது. அ

து மாத்திரமல்லாமல், குறித்த மென்பொருளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுகின்ற சமயம் முஜாஹித்தினால் மென்பொருள் தயாரிப்பாளரான காமிஸ் கலீஸ் அழைக்கப்பட்டு இரகசியமாக தீர்வு காணப்பட்டுள்ள விடயம் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் உத்தரவின் பிரகாரம் மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் எட்டுப் பேரைக் கொண்ட குழுவினால் கடந்த மார்ச் 02ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஆறு நாட்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கல்முனை மாநகர சபையின் வருமானத்துடன் தொடர்புடைய பல்வேறு வகையான ஆவணங்களும், கணணி மென்பொருளும் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  குறித்த நிதி மோசடி தொடர்பில் கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீத் மற்றும் கிழக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் எம். கலைஞானசுந்தரம் ஆகியோர் தலைமையிலான இரு குழுக்களினதும் இறுதி அறிக்கைகள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரத்நாயக்கவிடம் கடந்த ஒரு மாதங்களிற்கு முன்னர் கையளிக்கப்பட்டு விட்டன.

எனினும், கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் இதுவரை குறித்த நிதி மோசடி தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில்; கணக்காய்வாளர் றசீதினால மாகாண பிரதம செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பிரத கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் கல்முனை மாநகர சபையினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் ஊடாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கணக்காய்வுத் திணைக்களத்தினால் மாகாண பிரதமர் செயலாளரிடம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் இறுதி அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.