எம்.வி. எக்ஸ். பிரஸ் பேர்ள்: இந்தியாவின் மீட்பு நடவடிக்கை

எம்.வி. எக்ஸ். பிரஸ் பேர்ள்: இந்தியாவின் மீட்பு நடவடிக்கை

கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பரப்பில் இன்று (25) செவ்வாய்க்கிழமை தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்.பிரஸ் பேர்ள் கப்பலில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா பல்வேறு கப்பல்களை உடனடியாக அனுப்பியுள்ளது.

இலங்கை கடற் படையால் விடுக்கப்பட்டிருந்த அவசர உதவிக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய கரையோர காவல் படையின் வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்திர பிரேஹரி ஆகிய கப்பல்களும், கப்பல் துறையின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கு அமைவாக டக் வோட்டர் லில்லி கப்பலும், இவற்றிற்கு மேலதிகமாக வான் மார்க்கமான உதவிகளை மேற்கொள்ளும் நோக்கில் டோனியர் விமானமும் அனுப்பப்பட்டுள்ளது.

தீயணைப்பு  நடவடிக்கைகளுக்காகவும் மாசடைதலை தடுப்பதற்காகவும் இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கை கடற் படையினரால் இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரப்பட்டிருந்தது.

சிங்கப்பூரை சேர்ந்த எம்.வி.எக்ஸ்.பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்திருப்பதுடன் இதற்கான உதவியை கோரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தொடர்புடைய இந்திய தரப்பினர் விழிப்படைந்ததுடன் துரிதமாகவே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

டோனியர் விமானம் இன்று மாலை 4 மணியளவில் கொழும்பை வந்தடைந்த நிலையில் முதலாவது கப்பல் இரவு 7 மணியளவில் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முதலில் பதிலளிக்கும் பாரம்பரியத்தினை இந்தியா கொண்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் 200,000 மெட்ரிக் தொன்கள் மசகு எண்ணெயுடன் தீ விபத்துக்குள்ளான எம்டி..நியூ டைமண்ட் கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்திய உதவி கோரப்பட்டு பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தமை இந்தச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன் 2017 மே மாதம் இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து 3 இந்திய கடற்படை கப்பல்கள் உதவிப் பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.