கனிய மணல் அரசியல்!

கனிய மணல் அரசியல்!

றிப்தி அலி

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இரத்தினக் கல், கரியம், சுண்ணாம்புக் கற்கள், களிமண் வகைகள், கனிய மணல் வகைகள், இரும்புத்தாது மற்றும் உப்பு ஆகிய எமது நாட்டின் முக்கிய கனிய வளங்களாக காணப்படுகின்றன.

இலங்கையின் ஏற்றுமதியில் சுமார் மூன்று சதவீத பங்கினை கனிய வளங்கள் கொண்டுள்ளன. எமது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கனிய மண் ஏற்றுமதிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
இந்த ஏற்றுமதியின் ஊடாக வருடாந்தம் இலங்கைக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைப்பதாக கனிய வள ஏற்றுமதியாளர் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் நிறுவனத்தின் தரவுகளின் பிரகாரம் வருடாந்தம் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் கனிய மணல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சீனா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர், ஜேர்மன் போன்ற பல உலக நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 90 சதவீதமானவை இல்மனைட்டாகும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலேயே பெறுமதி வாய்ந்த கனிய மண் வளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இம்மாகாணத்தின் புல்மோட்டை மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களிலேயே இல்மனைட் காணப்படுகின்றது.

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் அமையப் பெற்றுள்ள புல்மோட்டை பிரதேசத்தின் சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கும் நூறு மீற்றர் அகலத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இல்மனைட் காணப்படுகின்றது.

இதுபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் முதல் உமிரி வரையான நான்கு கிலோ மீற்றர் பிரதேசத்திலும் இல்மனைட் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்காக கனிய மணலை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து, கிழக்கு மாகணத்திலுள்ள கனிய வளங்களை ஏற்றுமதி செய்வதில் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் குறிவைத்துள்ளனர். இதன் காரணமாக ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக பனிப் போர் இடம்பெற்று வருகின்றது.

கனிய வளங்களை அகழ்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்க வேண்டிய புவிச்சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகம் அமைச்சர் நசீர் அஹமதின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள கனிய வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சில அதிரடி உத்தரவுகளை கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றவுடன் மேற்கொண்டிருந்தார்.

மாகாணத்திலுள்ள கனிய மணல் மற்றும் கைத்தொழில் சார் கனிய வளங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அனைத்தையும் உடனடியாக இடைநிறுத்துமாறும், இதற்கு தேவையாக காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும் கிழக்கு ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், ஆளுநருடைய செயலாளரின் கடித்தின் ஊடாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசியலமைப்பினை நேரடியாக மீறும் செயல் என புவிச்சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகம் அறிவித்திருந்தது.

"கனிய வளங்கள் தொடர்பில் எந்தவொரு உத்தரவினையும் ஆளுநர் செயலகத்தினால் வழங்க முடியாது. இது தொடர்பில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என இப்பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பட்டய புவிச்சரிதவியல் நிபுணர் அஜித் பிரேம எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதேவேளை, 'கனிய மணல் மற்றும் மண் அகழ்வுகள்' எனும் தலைப்பில் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கடந்த ஜுலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு துறைக்கு பொறுப்பான அமைச்சரின் அனுமதி அவசியம் என கிழக்கு மாகாணத்திலுள்ள புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்கள் மூவரும் தனித் தனி கடிதங்களின் ஊடாக ஆளுநரின் செயலாளருக்கு அறிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை தொடர்க்கம் நிலாவெளி வரையான 13 கிலோ மீற்றர் பிரதேசத்தில் கனிய  மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு 'மிட் வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்துடன் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட அனுமதியினை அடுத்து இப்பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை குறித்த நிறுவனம் ஆரம்பித்திருந்தது.

இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுக்க தேவையான அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளமையினால் குறித்த திட்டத்தினை முன்னெடுக்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் ஆளுநரின் செயலாளரினால் குறித்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலின் படி ஆளுநரின் செயலாளரினால் வெளியிடப்பட்ட குறித்த கடிதத்தினை அமுல்படுத்துவதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் ஓகஸ்ட் 28ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை ஓகஸ்ட் 31ஆம் திகதி பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோரே 14 நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவினை வழங்கியுள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் உத்தரவிற்கு அமைய கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (05)    புல்மோட்டை தொடக்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் கனிய மணல் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத் தலைவரின் தன்னிச்சையான ஒப்பந்தத்தினை அடுத்து முன்னெடுக்கப்படும் ஆய்வு நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேசவாசிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற் தொழில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர். இதன்போது, 'அழிக்காதே அழிக்காதே இயற்கை வளத்தை அழிக்காதே', 'சுரண்டாதே சுரண்டாதே மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே', 'நிறுத்து நிறுத்து புளுஆடீ தலைவரின் தன்னிச்சையான முடிவை நிறுத்து', 'அழிக்காதே அழிக்காதே சுற்றுலாத்துறையை அழிக்காதே', 'மண் அகழ்வு ஒப்பந்தத்தை உடன் நிறுத்து' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு விஜயம் செய்த குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதனிடம் இந்த விடயத்தை ஜனாதிபதி, கிழக்கு ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலிலும் இருந்து பெறப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் கனிய மண் சீனாவிற்கு கடந்த வாரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனம் மேற்கொண்ட சர்வதேச அளவிலான கேள்வி மனுக்கோரல் ஊடாக சீன நிறுவனம் ஏற்கனவே தெரிவு செய்யட்டிருந்தது. சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக புத்தளம் இல்மனைட் நிறுவனம் செயற்படுகின்றது.

திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற கப்பலேற்றும் நிகழ்வில் புத்தளம் இல்மனைட் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் கனிம அகழ்வுத் துறை நிபுணருமான றையான் ரொக்வூட் விளக்கமளிக்கையில்,

"வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெறுமதியுடைய பெருமளவினால் கனிய மணலை இலங்கை ஏற்றுமதி செய்யுள்ளது. இது ஒரு சிறப்புவாய்ந்த ஏற்றுமதியாகும். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இக்காலத்தில் இடம்பெறும் இந்த ஏற்றுமதி மூலம் பல மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி இலங்கைக்கு கிடைக்கின்றது. நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இது பங்களிப்பை வழங்கும்" என்றார்.

இது போன்று மேலும் பல்லாயிரம் மெற்றிக் தொன் கனிய வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான முதலீட்டாளர்களை கொண்டுவரும் நோக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம், 21ஆம் திகதிகளில் கனிய வளங்கள் தொடர்பான விசேட மாநாடொன்றினை புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் கொழும்பில் நடத்தவுள்ளது.

 

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெறும் இந்த மாநாட்டில் 500 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்ப்பதாக பணியகத்தின் தலைவர் ஆர். சஞ்சீபன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கனிய மண்னை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு சூழலியலாளர்கள், சூழல் செயற்பட்டார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இக்கனிய மண் அகழ்வினால் சுற்றுச் சூழலுக்கு பாரியளவிலான சேதம் விளைவிக்கப்படும் என்பதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

எனினும், நாட்டுக்கு தேவையான அந்நியச் செலாவணி கொண்டு வரப்படும் என்ற நல்ல நோக்கில் இந்த கனிய மண் அகழ்விற்கு சில விட்டுக்கொடுப்புக்களுடன் தற்போது பொதுமக்கள் அனுமதி வழங்கி வருகின்றனர்.

"இதனால், நவீன தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக கனிய மணலை ஏற்றுமதி செய்தால் மாத்திரமே எமது நாட்டு நன்மை கிடைக்கும்" என தென் கிழக்கு பல்கலைக்கத்தின் புவியயல் இணைப் பேராசிரியரான எம்.ஐ.எம். கலீல் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், கனிய மண் அகழப்படும் பிரதேசமும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும் என அவர் குறிப்பிட்டார்.

"கனிய மணலை நேரடியாக ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ, நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தவித நன்மையும் கிடைக்காது. மாறாக, சில வெளிநாட்டு கம்பனிகளுக்கும், அவர்களின் உள்நாட்டு தரகர் நிறுவனங்களுக்கு மாத்திரமே நன்மை கிடைக்கும்" என இணைப் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.