மொசாட் அதிகாரியின் புத்தகம் இலங்கையில் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழிவகுத்தபோது

 மொசாட் அதிகாரியின் புத்தகம் இலங்கையில் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழிவகுத்தபோது

சாந்தனி கிரிண்டே

ஐக்கிய நாடுகளின் தொடர்புடைய தீர்மானங்களின் அடிப்படையில், பலஸ்தீன மக்களின் சுதந்திரமான அரசமைப்பிற்கான உரிமையை அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் அங்கீகரித்தாலும், இஸ்ரேலுடனான அதன் உறவுகள் உறுதியற்றதாகவே உள்ளன.

இலங்கை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை 2000ஆம் ஆண்டு ஏற்படுத்தியது, ஆனால் இலங்கையில் அதிகாரத்தை யார் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் வரலாற்று ரீதியாக ஊசலாடுகின்றன.

தீவின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க அத்தகைய உறவுகளில் சாத்தியத்தை கண்டதுடன், S.W.R.D. பண்டாரநாயக்கா மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோரின் கீழ் இலங்கை அணிசேராமையை ஏற்றுக்கொண்டு பலஸ்தீனம் மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஆதரவளித்ததால், இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்தன.

1977இல் பதவியேற்ற ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம், 1984இல் கொழும்பில் இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவை (IIS) நிறுவ அனுமதித்தது. IIS நிறுவுவதில் ஜெயவர்த்தனவின் நோக்கங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாதப் போரை நடாத்தும் தமிழ் குழுக்களிடையே போர்க் குணத்தின் வளர்ச்சியுடன் அதிகமான தொடர்புடையது.

இஸ்ரேல், இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதையும் மேற்கொண்டது.

ஆனால் 1988 இல் ஜயவர்தனவின் வாரிசான ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் அதிகரித்த முறையில் சுமுகமான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன். அவர் 1990 இல் IIS ஐ மூடி இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்தார்.

எனினும், அத்துடன் இஸ்ரேலுடனான பிரேமதாசவின் அத்தியாயம் நிறைவுக்கு வரவில்லை. 1990 இல் இஸ்ரேலிய புலனாய்வு சேவையின் முன்னாள் புலனாய்வு அதிகாரி விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டதுடன், அதிலுள்ள இலங்கை தொடர்பான பல குறிப்புகள் வெளியீட்டிலுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க பிரேமதாசவை தூண்டியது.

இந்த குற்றச்சாட்டுகளில் சில தீவிரமானவை, ஏனையவை நகைச்சுவையானவை. இஸ்ரேல் இலங்கைக்கு கணிசமான அளவு இராணுவ உபகரணங்களை வழங்கியதுடன் அதன் இராணுவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்த அதே வேளையில் அந்த நாடு தமிழ் போராளிகளுக்கும் ஆயுதங்களை வழங்கியதுடன் பயிற்சி அளித்தது என்ற கூற்றுக்கள் புத்தகத்தில் உள்ளடங்கியிருந்தன.

இது மற்றைய தரப்பு செய்வதைப் பற்றி இரு தரப்பினரும் அறியாமல் மேற்கொள்ளப்பட்டது. இது இஸ்ரேல் இலங்கைக்கு கடலோர ரோந்துக்காக பல PT படகுகளை விற்ற அதேநேரத்தில் தமிழ் போராளிகளுக்கு அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்த PT எதிர்ப்பு படகு உபகரணங்களை வழங்கிய நிகழ்வை மேற்கோள் காட்டியது.

இலங்கை Uzi துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடைகள் மற்றும் விசேட கையெறி குண்டுகள் உள்ளிட்ட இஸ்ரேலிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையுடன் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்கள் குறித்து இஸ்ரேலிய இராணுவ தளங்களில் பயிற்சியளிக்கப்பட்டதாக புத்தகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. வாங்கப்பட்ட உபகரணங்களில் ஏழு அல்லது எட்டு பெரிய PT படகுகள் (டோறா) இருந்தன.

இந்த புத்தகத்தில் மகாவலி அபிவிருத்தி செயற்திட்டப் பகுதியில் ஒரு செயற்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை போலியாக உருவாக்கி, இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக உலக வங்கி மற்றும் பிற முதலீட்டாளர்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான டொலர்களை பெற இலங்கைக்கு இஸ்ரேல் உதவியது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.

ரேடார் உபகரணங்களை வாங்குவதற்கு மதிப்பீடு செய்ய எதிர்பார்த்திருந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளின் குழுவிற்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டதாகவும், பார்வையாளர்களுக்கு அவர்களை ஏமாற்ற உண்மையான ரேடார் கருவிகளுக்கு பதிலாக ஒரு பெரிய வெற்றிட சுத்திகரிப்பு அமைப்பு காட்டப்பட்டது என்ற நகைச்சுவையான கூற்றும் இருந்தது.

ஜனாதிபதி பிரேமதாச, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சட்டமா அதிபர் எஸ்.டபிள்யூ.பி. வடுகொடபிட்டியவை விசாரணை ஆணைக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.

ஆணைக்குழுவானது ஆஸ்ட்ரோவ்ஸ்கி மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 100 சாட்சிகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. உயர் பாதுகாப்பு துறை மற்றும் இராணுவ அதிகாரிகள், சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய லலித் அத்துலத்முதலி மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் ஜனாதிபதி ஜெயவர்தனவின் மகன் ரவி ஜயவர்தன ஆகியோர் மற்றய சாட்சிகளாக இருந்தனர்.

ஒஸ்ட்ரோவ்ஸ்கி தனது புத்தகத்தில் ரவி ஜெயவர்த்தனவின் மனைவி பென்னி ஜயவர்தன இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போது உடன் சென்றதாக வெளிப்படுத்தினார். இந்த விஜயத்தின் போது, நாட்டிலுள்ள பல கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள இடங்களுக்குச் செல்வதற்காக அவரை அழைத்துச் சென்றதாக அவர் மேலும் கூறினார். அவர் ஆணைக்குழு முன்பும் சாட்சியம் அளித்தார்.

ஒஸ்ட்ரோவ்ஸ்கியை நேர்காணல் செய்வதற்காக வடுகொடபிட்டிய கனடா சென்றார். செல்லும் வழியில் அவர் லண்டனில் தங்கியிருந்தார், அங்கு அவர் ஜெயவர்த்தனவின் கீழ் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஐக்கிய இராச்சியத்திற்கான அப்போதைய இலங்கை உயர்ஸ்தானிகர் சேபால ஆட்டிகலவை நேர்காணல் செய்தார்.

எவ்வாறாயினும், ஏறக்குறைய ஒரு வருட விசாரணைக்குப் பிறகு, அதன் சில கண்டறிவுகள் சுவாரஸ்யமானவை என்றாலும், புத்தகத்தில் உள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்று ஆணைக்குழு தீர்மானித்தது.

ஒஸ்ட்ரோவ்ஸ்கி ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்தில், இலங்கை ஆயுதப் படைகளும் மற்றும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களும் இஸ்ரேலால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

ஆனால் எந்தவொரு தமிழ் பயங்கரவாதிகளும் இஸ்ரேலில் பயிற்சி பெற்றதாக எதுவிதமான ஆதாரமும் இல்லை என்று ஆணைக்குழு தீர்மானித்தது. ஒஸ்ட்ரோவ்ஸ்கி குறிப்பிட்ட காலப்பகுதியில், அதாவது 1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் இலங்கை போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்றதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என்று ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டது. ரேடார் உபகரணங்களை வாங்குவதற்காக மதிப்பிட இஸ்ரேலுக்குச் சென்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழு இஸ்ரேலியர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறுவது தொடர்பாக, ஆசிரியர் கூறியது போல் ஒரு குழு ரேடார் உற்பத்தியாளரிடம் சென்றிருந்தாலும், இலங்கை குழுவினர் ஏமாற்றப்பட்டமைக்கு உண்மையான ஆதாரம் இல்லை என்று ஆணைக்குழு கண்டறிந்தது.

குழு உறுப்பினர்களுக்கு வெற்றிட சுத்திகரிப்பு அல்லது ரேடார் உபகரணங்களோ காட்டப்படவில்லை, மாறாக ஹீப்ரு எழுத்துக்களுடன் சில புரியாத திட்ட வரைபடங்கள் காட்டப்பட்டதாக ஆணையாளர் கூறினார். உற்பத்தியாளரிடமிருந்து ரேடார் கருவிகளை வாங்க பரிந்துரைக்கப்படவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது.

மகாவலி அபிவிருத்தி செயற்திட்டப் பகுதியில் சாத்தியக்கூறு அறிக்கையை போலியாக உருவாக்கி, உலக வங்கி மற்றும் ஏனைய முதலீட்டாளர்களை ஏமாற்றி ஆயுதக் கொள்வனவுகளுக்காக மில்லியன் கணக்கான டொலர்களை பெற இலங்கைக்கு இஸ்ரேல் உதவியது என்ற கூற்று தொடர்பில், இரண்டு இஸ்ரேலிய நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

இரண்டு இஸ்ரேலிய நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து மகாவலி “C” வலயத்தில் ஒரு பரிசோதனை பண்ணைக்கான அறிக்கையை தயாரித்துள்ளனர், ஆனால் அதற்கான நிதியளிப்பு உலக வங்கியை உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்று ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. நிதியளிப்பிற்காக ஐரோப்பிய பொருளாதார சமூகம் அணுகப்பட்டது, ஆனால் செயற்திட்டம் வெற்றியளிக்கவில்லை.

சுவாரஸ்யமாக, இந்த இரண்டு இஸ்ரேலிய நிபுணர்களும் இலங்கைக்கு வருகை தந்தது தொடர்பான எதுவிதமான பதிவுகளையும் ஆணைக்குழுவால் கண்டறிய முடியவில்லை, ஏனெனில் அவர்கள் வருகை தொடர்பான எதுவித பதிவையும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கொண்டிருக்கவில்லை.

விசாரணையின் போது தெரியவந்த ஒரு கவலையளிக்கும் உண்மை என்னவென்றால், 1986ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் கேள்விமனுக்கோரல் சபையின் பரிந்துரையின் பேரில் இலங்கை பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியது.

பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்வதை அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் நளின் செனவிரத்ன எதிர்த்த போதிலும், பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு காரணமாக, அதனைத் தடுக்க எந்தவிதமான வழியும் இல்லை.

மாறாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செனவிரத்ன ஆயுத நிபுணரான இராணுவ அதிகாரி ஒருவரை ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு இஸ்ரேலுக்கு அனுப்பியிருந்தார். இஸ்ரேலுக்கு வந்தபோது, அந்த ஆயுதங்கள் ஏற்கனவே கொள்கலங்களில் பொதிசெய்யப்பட்டிருந்ததையும், அனுப்பப்படவிருந்ததையும் அதிகாரி கண்டறிந்தார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் பரிசீலித்தல் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதுடன் அதிகளவில் ஒத்துழைக்கவில்லை. எவ்வாறாயினும், இலங்கை அதிகாரி தன்னால் முடிந்தவரை ஆயுதங்களை பரிசோதித்ததில் சில ஆயுதங்கள் உண்மையில் குறைபாடுள்ளவை என்பதைக் கண்டறிந்தார்.

எதிர்காலத்தில் ஆயுதப் படைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாது என ஆணையாளர் பரிந்துரை செய்தார். இந்த ஆயுதங்களை கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை படையினருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நிச்சயமாக ஒருபோதும் அறியப்படாததாகும்.

ஆணைக்குழுவின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், இஸ்ரேலுடனான இலங்கையின் உறவுகள் அன்றிலிருந்து கணிக்கக்கூடியதாகவே உள்ளது. 2000 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் மீளமைக்கப்பட்டதன் பின்னர் உறவுகள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஆயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றன அதேவேளையில் நாடுகளுக்கு இடையில் விவசாயம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு காணப்படுகின்றது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கடினமான உறவுகளில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ள இலங்கை, தற்போது இரு நாடுகளுடனும் நல்லுறவை பேணி வருகிறது.

இக்கட்டுரையாளரான சாந்தனி கிரிண்டே ஒரு சிரேஷ்ட அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரையாளர் என்பதுடன் இலங்கையில் நீண்டகாலமாக பாராளுமன்ற நிருபராக பணியாற்றி வருகின்றார். அவரை chandani.kirinde2016@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக அணுகலாம்.