பள்ளிவாசலில் சன நெரிசல்; மூவர் உயிரிழப்பு என ஐலன்ட் பத்திரிகையில் வெளியான செய்தி பொய் என நிரூபணம்

பள்ளிவாசலில் சன நெரிசல்; மூவர் உயிரிழப்பு என ஐலன்ட் பத்திரிகையில் வெளியான செய்தி பொய் என நிரூபணம்

மாளிகாவத்தை மஸ்ஜித் வீதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக மூவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்தனர் என இன்று (22) வெள்ளிக்கிழமை வெளியான ஐலன்ட் ஆங்கில பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

புனித நோன்பு காலப் பகுதியில் கொழும்பு - மாளிகாவத்தை பிரதேசத்திலுள்ள ஏழை, எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில்  முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்றுதிரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – 10, மாளிகாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பெண்களுக்கு மேலதிகமாக ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே மாளிகாவத்தை மஸ்ஜித் வீதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக மூவர் உயிரிழந்தாதக ஐலன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த செய்தியினை மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் பொதுச் செயலாளரான ஏ.எச்.எம்.இக்பால் நிராகரித்ததுடன், "கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது" என்றார்.

"முஸ்லிம் சமய விவகார திணைக்களதின் அறிவுறுத்தலின் பிரகாரம் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலில் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை. இவ்வாறான நிலையில் பள்ளிவாசலில் எவ்வாறு நிதி வழங்க முடியும்" என அவர் கேள்வி எழுப்பினார்.

"ஐலன்ட் பத்திரிகையில் இன்று வெளியான செய்தி பொய்யானதொன்றாகும். குறித்த சம்பவம் தனியார் களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளதாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேற்று இரவு செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பத்திரிகை மாத்திரம் பிழையாக செய்தி வெளியிட்டுள்ளது" என மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் மேலும் கூறினார்.