யாழில் 07 முதல் 10 வரை 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கண்காட்சி

யாழில் 07 முதல் 10 வரை 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கண்காட்சி

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' மூன்றாவது தேசியக் கண்காட்சி எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் பிரதேசம் சார்ந்த அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மொனராகலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இதற்கு முன்னர் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. அங்கு நடைபெற்ற கண்காட்சிகளின் வெற்றியின் காரணமாகவே யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கண்காட்சியில் முயற்சியாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் கடன்களை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் நிமித்தம் அரச வங்கிகள் அனைத்தினதும் அதிகாரிகளும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசம் சார்ந்த முயற்சியாளர்கள் கண்காட்சியின் முதலாம் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் இதற்கான விண்ணப்பங்களைக் கையளிக்க முடியும்.

இரண்டாவது வலயத்தில் விசேட நோய் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. தொற்றா நோய்கள் தொடர்பில் பிரசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.  

மூன்றாவது வலையத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் இணக்கப்பாடு திணைக்களத்தின் ஊடான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அத்துடன், இலங்கையின் பண்மை நாணயங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இளைஞர் யுவதிகளை ஈர்க்கும் வகையில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கண்காட்சியும் நடைபெறவுள்ளது. அதேபோன்று ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.  

முயற்சியான்மைகள் தொடர்பிலான செயற்முறைசெயற்பாடுகளும் செய்துகாட்டப்படவுள்ளன. கைப்பணி தொடர்பிலான செயற்பாடுகள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை செய்துக்காட்டப்படவுள்ளன.

பனை ஓலையில் செய்யப்படும் கைப்பணிப் பொருட்கள் தொடர்பிலான கண்காட்சி செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது. வடிவமைப்பு நிகழ்ச்சித்திட்டம் 8ஆம் திகதியும், வர்ணம் தீட்டும் (பற்றிக்) 9ஆம் திகதியும், மணப்பெண்களை அலங்கரிக்கும் பயிற்சி 10ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.