'நிந்தவூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனரா?'

 'நிந்தவூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனரா?'

நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே. சுகுணன் விடியல் இணையத்தளத்திற்கு இன்று (16) வியாழக்கிமை இரவு 10.15 மணியளவில் தெரிவித்தார்.

"நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்" எனும் தலைப்பிலான துண்டுபிரசுரமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பள்ளிவாயல் ஒலிபெருக்கில் மஹ்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளுக்கான பாங்கின் பின்னர் அறிவிக்குமாறு வழங்கப்பட்ட இந்த அறிவித்தலில் "எமது பிரதேசத்தில் இந்த நோயின் தாக்கம் காரணமாக இருவர் இனங்காணப்பட்டதாலும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரிமாறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த செய்தியினை உண்மைத் தன்மையினை அறிவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே. சுகுணனை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்ட போது, "குறித்த செய்தியில் எந்தவித உண்மையுமில்லை" என்றார்.

இது தொடர்பில் விடியல் இணையத்தளத்திற்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இந்த நிலையில் எமது பகுதி மக்கள் இன்னும் சுகாதார பாதுகாப்பு நடைமுறை கடைப்பிடிப்பதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளனர்.

இதனை தவிரக்கும் விதமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தேன்.

இதற்கமைய, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் மக்களுக்கென அறிவிக்க பள்ளிவாசல்களுக்கு  விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் எமது பிரதேசத்தில் இரு கொரோனா நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

எவ்வாறாயினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரேனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த  இரு இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரு வேறு இராணுவ முகாம்களில் கடமையாற்றி வருகின்றனர். இதுவே உண்மையாகும். எனவே, நிந்தவூர் பகுதியில் இரு கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட தகவல் என்பது வெறும் வதந்தியாகும்.

இதனால், தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.

-பாறுக் ஷிஹான்-