இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுமா?

இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுமா?

படம்: Amantha Perera/IRIN

-றிப்தி அலி-

"மன்னார் மாவட்டத்தின் சிலவாத்துறை பிரதேசத்தினைச் சேர்ந்த நான் தற்போது புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றேன். எனினும், மன்னார் மாவட்ட வாக்களார் இடாப்பில் எனது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளமையினால் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு அங்கு சென்றே வாக்கினை செலுத்த வேண்டியுள்ளது", என்கிறார் எம்.எப்.ஏ.நஸ்மியா.

இந்த முறை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் கொத்தாணி வாக்குச்சாவடிகள்  அமைக்கப்படுகின்றன. அதற்கு விண்ணப்பிக்காமையினால் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இவருக்கு கிடைக்கவில்லை.

வட மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 100,000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கடந்த 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் பரந்து வாழ்கின்றனர்.

இவர்களின் பெரும்பாலானோர் புத்தளம் மாவட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். எனினும், இவர்களில் பெரும்பாலானோரின் வாக்களிக்கும்  உரிமை, வட மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திலேயே காணப்படுகின்றது.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் மூன்று தேர்தல் தொகுதிகளாக உள்ளடக்கியதே இந்த வன்னி மாவட்டமாகும். எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக 287,024 பேர் வன்னி மாவட்டத்தில் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் வவுனியா தேர்தல் தொகுதியில் 119,811 வாக்காளர்களும், மன்னார் தேர்தல் தொகுதியில் 88,842 வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 78,360 வாக்கர்களும் காணப்படுகின்றனர்.

இதற்குள் வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்களர்களும் காணப்படுகி;ன்றனர். இவர்கள் புத்தளத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வன்னி மாவட்டத்தில் வாக்களிக்கமால் புத்தளம் மாவட்டத்திலேயே வாக்களிப்பதற்காக 1994ஆம் ஆண்டு முதல் கொத்தனி வாக்குச் சாவடி முறையொன்று காணப்பட்டது.

எனினும் யுத்த நிறைவுக்கு வந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதனை அடுத்து கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கும் முறை நிறுத்தப்பட்டது.

எனினும், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களில் பலர் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளிலேயே வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர்.

"இவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலேயே வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பதிவினை மேற்கொண்டுள்ளதாக" நாகவில்லு பிரதேசத்தினைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞான ஆசிரியரான ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

"தங்களின் சொந்த இடங்களுக்கு மீளக்குடியேற இவர்கள் விரும்புகின்றனர். இதன்போது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டம், சுயதொழில் உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றினை பெறும் நோக்கில் இவ்வாறு வாக்காளர் பதிவினை அங்கு மேற்கொண்டுள்ளதாக" அவர் குறிப்பிட்டார்.

இதனால், குறித்த மக்கள் வாக்களிப்பதற்காக சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தினை ஏழு மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் இவ்வாறு பயணித்தே கடந்த பல தேர்தல்களில் தங்களின் வாக்குகளினை செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கடந்த நவம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்ற இந்த மக்கள் பல்வேறு தேர்தல் வன்முறைகளை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது. 'வாக்களிப்பது  ஒரு தனிநபரின் உரிமை' என இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் முதலாம் அத்தியாயத்தின் மூன்றாம் உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பயன்படுத்துவதை தடுப்பது மனித உரிமை மீறலாகும்.

இவ்வாறான நிலையில், "இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொத்தணி முறையில் புத்தளத்திலேயே வாக்களிக்க ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன" என புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரான என்.ரேஹான் தெரிவித்தார்.

இது தொடர்பில் 2165/18ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த மார்ச் 03ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்கவினால் வெளியிடப்பட்டது.

"வேறொரு பிரதேசத்தில் இருக்கும் நிலைமை காரணமாக தனக்கொதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாதுபோகுமென்ற நியாயமான அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளரொருவர் வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு 1988ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127ஆவதின் 'ஆ' பிரிவின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைக்கலாம்" என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2020.03.02ஆம் திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் இதற்கான விண்ணப்பப்பத்திரங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும் எனவும் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான விண்ணப்பப்பத்திரங்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் கிராம அலுவலர்களின் அலுவலகங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடும் இருந்தது.

எனினும் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை போதாது என ஆசிரியர் றியாஸ் தெரிவித்தார். "அத்துடன் விண்ணப்பம் கோரப்பட்டமை தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. கண்துடைப்புக்காக இந்த விண்ணப்பம் கோரப்பட்டது போன்றுள்ளது" என அவர் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் வட மாகாணத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள 6,545 பேர் இந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக விண்ணபித்திருந்தாக புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரான என்.ரேஹான் தெரிவித்தார்.  

இதில் 267 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 6,278 பேர் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என அவர் தற்போது குறிப்பிடுகிறார்.

இந்த மக்களுக்காக கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள செயற்த்திட்டத்தினை வரவேற்பதாக கபே என்று அழைக்கப்படும் நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளரான அமஹட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

இதன் காரணமாக பல மணித்தியாலங்கள் செலவளித்து அவர்கள் நீண்ட தூரம் மேற்கொள்ளும் பயணம் தவிர்க்கப்படுவதுடன், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

அத்துடன் குறித்த மக்களின் வாக்களிக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது என மனாஸ் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் 2,000 தொடக்கம் 2,500 வரையான இடம்பெயர்ந்த வாக்காளர்கள் இந்த கொத்தணி வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி ஜன பலவேயவின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதனால், வன்னி தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்றே இவர்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

புத்தளத்திலிருந்து வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு வாக்களிப்பதற்காக செல்வதற்கு இவர்கள் தற்போது அச்சம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு குறித்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை உறுதிப்படுத்துமாறு வேணடுகோள் விடுப்பதாக முன்னாள் எம்.பி கூறினார்.

இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் வாக்களிப்பதற்காக முன்னர் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

"எனினும் குறித்த மக்கள் தற்போது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்டமையினால் அவர்களுக்கொன்று ஏற்படுத்தப்பட்ட கொத்தனி வாக்குச்சாவடிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக" வவுனியா மாவட்ட தேர்தல் கண்கானிப்பாளரொருவர் தெரிவித்தார்.

இதுபோன்று, தொழில் நிமித்தமாக மலையகம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொழும்பில் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலனாவர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களிலேயே வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர். இதனால் வாக்களிப்பதற்காக இவர்கள் பல ரூபாய்க்களை செலவளித்து, பல மணிநேரம் பயணிக்க வேண்டியுள்ளது.

கொரேனா நோய் பரவலினை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பணம் செலவளித்து தங்களின் சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிப்பார்களாக என்ற கேள்விக்குரியொன்றுள்ளது. இதனால், தமது உரிமையை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

"எவ்வாறாயினும் தங்களின் வாக்களிக்கும் உரிமையினை வினைத்திறனாக பயன்படுத்தி சிறந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்" என பெப்ரல் அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தரான நந்தினி செல்வதுரை தெரிவித்தார்.

இதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கான எமது நாட்டினை வினைத்திறனாக கட்டியொழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை - ஊடகவியலாளர்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், ஹோட்டேல்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான மனாஸ் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தின் கீழ் பயணத் தூரத்தினை அடிப்படையாக வைத்து விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இதனை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கபே தயாராகவுள்ளது" என அவர் மேலும் கூறினார். 

இதேவேளை, மலையகத்தினைச் சேர்ந்த 120,00க்கும் 150,000க்கும் இடைப்பட்ட வாக்காளர்கள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் பணியாற்றி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொழும்பு வாழ் மலைய இளைஞர்களின் அமைப்பாளரான தசி கணேஷன் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் வகையிலான  விழிப்புணர்வு செயற்த்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பல வாக்களார்கள் மலையகம் சென்று வாக்களித்து தங்கள் சமூகத்திற்கு தேவையான சிறந்த தலைவர்களை தெரிவுசெய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான மனாஸ் கூறுகிறார்.

தொழில் நிமித்தம் வெளி மாவட்டங்களில் வாழும் மக்கள் அவர்கள் விரும்பும் பிரதேசத்தில் வாக்களிப்பது தொடர்பில் இந்த சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையினை இழக்கின்றனர்.  அவர்களின் வாக்குரிமையனை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது போன்றே, 1980ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க வாக்களர் பதிவு தொடர்பிலான சட்டத்திலும் சில திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

அதாவது, ஒவ்வொரு வருடமும் ஜுன் முதலாம் திகதி குறித்த நபரொருவர் வாழும் பிரதேசத்திலேயே வாக்காளராக பதியப்பட வேண்டும் என குறித்த சட்டமூலத்தின் 4ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களின் பூர்வீக பிரதேசத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்யும் வாய்ப்பினை இழப்பதாக அவர் மேலும் கூறினார்.

இது போன்ற காரணங்களினால் 1980ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க வாக்களர் பதிவு மற்றும் 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் வாக்களர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படும். இதற்கு தேவையான அழுத்தங்களை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் ஆகியன கூட்டாக இணைந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுக்க மத்தியில் நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கு வழமையினை விட பல மில்லயன் ரூபா அதிகமான நிதி செலளிக்கப்படுகின்றது.

மக்களின் வரிப் பணத்தின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்பட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியினை உருவாக்குவதற்காகவே தேர்தல் நடத்தப்படுகின்றது. இதனால் தங்களின் வாக்குரிமையினை சிறந்த முறையில்  பயன்படுத்தி சிறந்த ஆட்சியினை நாட்டில் உருவாக்குவது அனைத்து வாக்காளர்களினதும் தலையாய கடமையாகும்.