கொவிட்-19: பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பின் ஊடக அறிக்கை

கொவிட்-19: பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பின் ஊடக அறிக்கை

கொவிட்-19 காரணமான தனிமைப்படுத்தல் ஆரம்பித்து இருமாதங்கள் பூர்த்தியாகவுள்ள இந்த வேளயில் இலங்கையர்களான நாம் சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமுக, இன இணக்கப்பாடு மற்றும் ஜனநாயம் எனப் பல்வேறு விதமான அதிர்ச்சிகளை எதிர்நோக்கியுள்ளோம்.

உலகெங்கும் நாற்பது இலட்சம் பேரைப் பாதித்து சுகாதார ரீதியில் நமக்கு அதிர்ச்சியைத் தந்த கொவிட்-19 வைரஸ் நோய் நமக்கும் தொற்றிவிடுமோ எனும் பீதி தொடர்ந்து இருந்து வருகின்றது.

பொருளாதார ரீதியில் ஏற்பட்ட அதிர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும் பின்தங்கிய வறிய மக்களைப் பாதித்ததும் மட்டுமல்லாது, பாரிய அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைத் தொழிலற்றவர்களாக மாற்றும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணமிருக்கின்றது.

இந்த நிலையை மேலும் சிக்கலாக்கும் வண்ணம் மீண்டும் முஸ்லிம்களைக் குறிவைத்து, சந்தேகங்கள், வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் சூக்சுமமாக பல்விதமான பாகுபாடுகள் போன்றவை தலை தூக்கியுள்ளன.

கொவிட்-19 நோய் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் முறைப்பாடு செய்யுமளவிற்கு அவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுகின்றன.

நாட்டின் அரசியல் நிலைமை கவலையைத் தருவதாக உள்ளது. சமீபகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்கள் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் ஸ்திரப்பாட்டையும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன என்று பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் எனும் அமைப்பு கருதுகின்றது.

மக்கள் அனைவருமே நாட்டின் அரசாட்சியிலும் தலைவர்களிலும் நம்பிக்கை வைக்க வேண்டிய நேரமிது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பலவிதத்திலும் நிச்சயமின்மையை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும் பாதுகாப்பான, ஸ்திரமான ஜனநாயக ஆட்சிமுறையின் முக்கியத்துவத்தை நாம் மறக்கலாகாது.

தமது வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒத்துழைப்புடன் சவால்களை எதிர்கொள்ள விரையுமாறு அரச தரப்பினரையும் மற்றும் எதிர்கட்சியினரையும் வேண்டிக் கொள்கின்றோம். மக்களின் தேவைகள், பயங்கள் போன்றவற்றிற்கு முதலிடம் கொடுக்க வேண்டிய கடப்பாட்டை அரசிற்கும் எதிர்க்கட்சியினருக்கும் நினைவுறுத்தி இந்த இக்கட்டான நிலையில் நம்மைக் கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தமக்கிருக்கும் ஆபத்தைப் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன், இந்த கொவிட்-19 நோய்க்கு எதிராக முன்னிற்கும் மருத்துவ, துணை மருத்துவ, பொலிஸ் மற்றும் இராணுவம் உத்தியோகத்தர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். நமது நாட்டின் ஆரோக்கியத்திற்கும் நோய் மற்றும் ஏனைய இடர்களிலிருந்து பாதுகாப்பிற்கும் நாம் பிரார்த்திப்போம்.

ஒப்பம்
 
1.    வணகக்த்திற்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர்
2.    வணகக்த்திற்குரிய பேராயர் துலிப் சிக்கேரா
3.    வணகக்த்திற்குரிய பிதா நொயெல் பெர்னாண்டோ
4.    வணகக்த்திற்குரிய சகோதரை ரசிகா பீரிஸ்
5.    வணகக்த்திற்குரிய சுவாமி குணாதீதானந்த ஸரஸ்வதி
6.    அஷ்ஷைக் எஸ்.எச்.எம். பளீல்
7.    அஷ்ஷைக் ஸியாத் இப்ராஹிம்
8.    அஷ்ஷைக் எம். அப்துல்லாஹ்
9.    வைத்தியர் தாரா டி மெல்
10.    பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க
11.    திரு அழகன் கனகரத்தினம்
12.    திரு ஹர்ஷ குணசேன