வவுனியா பல்கலையில் SRHR குறித்த உரையாடலைத் தூண்டிய பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள்
வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ELEVATE திரைப்படத் திரையிடல் மற்றும் குழு கலந்துரையாடலில் அதிகம் பேசப்பட்ட Power என்ற குறும்படம், கல்வித் துறையில் நிலவும் பாலியல் இலஞ்சம் மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களில் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டியதன் அவசியம் போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியது.
திரையிடப்பட்ட 10 திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருந்த நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து கல்வியாளர்கள் மிகவும் திறந்த மனதுடனும், அக்கறையுடனும் கருத்து தெரிவித்தனர்.
பல்கலைக்கழகச் சூழலில் உள்ள ஒவ்வொரு மாணவரும் சுதந்திரத்தை உணர வேண்டும், தன்னாட்சி உரிமை மற்றும் எந்தவிதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுபட உரிமை வேண்டும் என்பதை கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
இது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். மேலும் இது போன்ற பிரச்சினைகளில் அக்கறை கொண்டு, பல்கலைக்கழக அமைப்பிற்குள் இந்த பிரச்சினைகளை நேர்மையுடன் பேசவும் தீர்க்கவும் தயாராக இருக்கும் கல்வியாளர்கள் இருப்பது ஊக்கமளிக்கிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மாணவர்களைப் பாதுகாப்பதற்கும், எந்தவொரு துன்புறுத்தல்,பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்தும் (GBV) அவர்களுக்கு உதவுவதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் இலவச மற்றும் சமமான கற்றல் அனுபவத்தை உருவாக்குவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதையும் உறுதியுடன் இருப்பதையும் பல கல்வியாளர்கள் தொடர்புபடுத்திப் பேசினர்.
இந்த விடயத்தில், UGC ஒரு இணையவழியாக முறைப்பாடளிக்கும் தளத்தையும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் எந்தவொரு மாணவரும் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பற்றி பாதுகாப்பாகவும் மிகவும் இரகசியமாகவும் முறைப்பாடளிக்க முடியும். பெப்ரவரியில் நடைபெற்ற 5வது ELEVATE திரைப்படத் திரையிடல் மற்றும் குழு கலந்துரையாடல் திறமையின் வெளிப்பாடாக அமைந்தது.
ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் (CMIL) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ மையம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ மையம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்வு, சினிமா எனும் சக்தியின் மூலம் பெண்களின் குரல்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.
பெண் இளங்கலை திரைப்பட தயாரிப்பாளர்களால் இயக்கப்பட்ட பத்து குறும்படங்கள், நெருங்கிய துணையின் வன்முறை, மாதவிடாய் பிரச்சினைகள், பாலின முன்கற்பிதங்களைச் சுற்றியுள்ள களங்கம் மற்றும் பெண் மாணவர்களின் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என பல்வேறு விதமான பிரச்சினைகளைத் தொட்டுச் சென்றன.
திரையிடல்களைத் தொடர்ந்து, திரைப்படங்களில் ஆராயப்பட்ட கருப்பொருள்களை இன்னும் ஆழமாக ஆராய ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது, இது SRHR மற்றும் இணைய பாலின அடிப்படையிலான வன்முறை (CGBV) பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கியது.
ELEVATE திரைப்படத் திரையிடல் மற்றும் விவாதம் ஒரு செயற்பாட்டுக்கான அழைப்பாக அமைந்தது. பெண்களின் SRHR மற்றும் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் அவர்களின் தன்னாட்சியைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை இந்த கலந்துரையாடல்களும் திரைப்படங்களும் வலியுறுத்தின.
பகிரப்பட்ட கதைகள் வெறும் புனைகதைகள் அல்ல - அவை வாழ்க்கை அனுபவங்களின் பிரதிபலிப்புகள், குறிப்பாக கல்வி மற்றும் தொழில் சூழல்களில், பெண்கள் எவ்வாறு அதிகாரத்தால் அமைதியாக்கப்படுகிறார்கள் மற்றும் சுரண்டப்படுகிறார்கள் என்பதை இவை காட்டுகின்றன.
Comments (0)
Facebook Comments (0)