சமூக வலைத்தளங்களில் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

சமூக வலைத்தளங்களில் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

கொரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிட்ட 7 பேர் கடந்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 10ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிருவரும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் வெலிமடை, கடவத்தை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர, நொச்சியாகம நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்று குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிட்டமை தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.