என்னிடமுள்ள இரண்டு கதாபத்திரங்களையும் காண்பிக்கத் தயார்: ஹரீனுக்கு ஜனாதிபதி பதிலடி

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

பித்தளை சந்தியில் விடுதலைப் புலிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாத அரசியல் நடைமுறையை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.

அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இன்று (09) சனிக்கிழமை இடம்பெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.