ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாகும்: ஜமாஅத்தே இஸ்லாமி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாகும்: ஜமாஅத்தே இஸ்லாமி

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதும் ஆதாரமற்றவையுமாகும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்தது.

குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி குறிப்பிட்டது.

இது தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி பாரிஸ் ஸாலி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமய இயக்கமாகும். 1958ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அதன் யாப்பின் ஷரத்து 1 (அ) வின்படி இலங்கை நாட்டினதும் இவ்வமைப்பினதும் யாப்புகளுக்கு உடன்படும் வகையில் தனது அங்கத்தவர்களுக்கும் அபிமானிகளுக்கும் நலன்புரி சேவைகளை வழங்குவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓர் அமைப்பு என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் அதன் பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்படாமை இயற்கை நீதியின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்த செயற்பாடாகும்.

இந்நிலையில், ஒரு பிரதான முஸ்லிம் சிவில் சமூக அமைப்பான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை தடைசெய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக் குழு கோரியிருப்பதையிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

“எந்தத் தரப்பின் செயற்பாடு இந்த சட்டமூலத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறதோ அல்லது ஏதாவதொரு விதத்திலாவது சம்பந்தப்படுத்தப்படுகிறதோ அத்தரப்பினர் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அத்தரப்பினரின் பக்க நியாயங்களைக் கேட்டறியவும் வாய்ப்பளிக்கப்படல் வேண்டும்” என விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டமூலத்தின் 16ஆவது பிரிவு குறிப்பிடுகின்றபோதும் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எத்தகையும் ஆணையும் அனுப்பப்படவில்லை.

எனவே, விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டமூலத்தின் 16ஆவது பிரிவுக்கேற்ப உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக் குழு செயலாற்றவில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிக்க விரும்புகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி குறிப்பிடத்தக்களவிலான ஆயுதங்களை தன்வசம் வைத்துள்ளதாகவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150 முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாகவும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

ஆணைக்குழு இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் தன்னோடு இணைக்கப்பட்ட CID அலகிலிருந்து ஒரு குழுவை அனுப்பி குறித்த அந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அந்த ஆயுதங்களையும் அவற்றை வைத்திருந்தவர்களையும் ஆணைக் குழுவின் முன் கொண்டு வந்திருக்கலாம்.

இந்த அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானது என்பதுடன் அதனை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முற்றாக மறுக்கிறது.

இது போன்ற முன்மொழிவுகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அதனுடன் இணைந்த ஒரு சுயாதீன அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோர் பற்றி ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏனைய விடயங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் யாப்பை மீறி அதன் உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தியமையின் காரணமாக அவ்வமைப்பிலிருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டார். அவர் பின்னாட்களில் மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

குறித்த அந்த நபர் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலிருந்து ஏலவே விலக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உரிய பெறுமானம் வழங்கப்படாமையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆச்சரியமாக நோக்குகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினராக இருந்த அவரது தந்தையும் இதே போன்றதொரு காரணத்திற்காக மாவனல்லை புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரத்துக்கு முன்னரே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். அப்போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக இருந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களது ஆலோசனையின் பேரிலேயே அவரது உடன் பிறந்த சகோதரரான அவர் விலக்கப்பட்டார்.

இலங்கை நாட்டினதும் இவ்வமைப்பினதும் யாப்புகளை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினாலும்  அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினாலும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினாலும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அவ்வமைப்புகளின் முன்னுதாரண செயற்பாடுகளுக்கு சிறந்த சான்றுகளாகும்.

வன்மையான கண்டனத்துக்குரிய புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரம் தொடர்பில் ஓர் இஸ்லாமிய அமைப்பு என்ற வகையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பின்வரும் குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறது. “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.” (ஸூரதுல் அன்ஆம்: 108)

இந்த அல்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் மற்றவர்கள் வணங்குபவற்றை, சிலைகளை சேதப் படுத்துவதை, அவற்றை அழிப்பதை இஸ்லாம் கண்டிப்பாக தடைசெய்திருக்கின்றமை தெளிவாகிறது.

2018 டிஸம்பர் புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரத்தையும் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மிகவும் வன்மையாக கண்டித்தது. அவை இஸ்லாத்துக்கு முரணான, மனிதாபிமானமற்ற, மிலேச்சத்தனமான, குரூரமான நடவடிக்கைகள் என்பதே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுதியான நிலைப்பாடாகும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கான விரிவான பதிலை மிக விரைவில் வெளியிடுவோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2021 மார்ச் 23ஆம் திகதிய ‘Island’ நாளிதழில் “Govt. initiatives to counter extremism can become counterproductive” எனும் தலைப்பில் வெளியான செய்திக் கட்டுரையில் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ள மேற்கோளுடன் இதனை முடிக்க விரும்புகிறோம்.

"இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, வை.எம்.ஸீ.ஏ. அல்லது சர்வோதய போன்ற அமைப்புகளை ஒத்த வகையில் தன்னோடு இணைந்துள்ளவர்களின் வாழ்க்கையில் பண்பாடு, சமூக வலுவூட்டல் என்பவற்றை மேம்படுத்தும் இலக்கோடு செயல்படுகிறது.

1954இல் நிறுவப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உயர் விழுமியங்கள், அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஊக்குவித்தல், வறுமையை ஒழித்தல் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். இது போன்ற அமைப்புகள் இலங்கை சமுதாயத்தின் பிரதான நீரோட்டத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும்” என்றார்.