அடிப்படைவாதம் பரப்பிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டன: அரசாங்கம்

அடிப்படைவாதம் பரப்பிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டன: அரசாங்கம்

நாட்டில் அடிப்படைவாத்தினை பரப்பிய அமைப்புக்களையே அரசாங்கம் தடை செய்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு குறித்த அமைப்புக்கள் தடை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

"இந்த அமைப்புக்கள் தொடர்பில் தனிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த அமைப்புக்கள் நாட்டில் அடிப்படை வாதத்தினை பரப்பியதற்கான தெளிவான ஆதரங்கள் கண்டுபிடிப்பட்டன. இதனையடுத்தே இந்த அமைப்புக்களை தடை செய்தோம்" என அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தால், அவர்களின் தடை தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகள் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி தடைசெய்யப்பட்டன. .

இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன:

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.)
3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.)
5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.)
6. தாருல் அதர்
7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்
8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு
9. அல்கைதா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு