துருக்கியின் வரலாற்று நகரான பர்சாவில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் திறப்பு

துருக்கியின் வரலாற்று நகரான  பர்சாவில் இலங்கையின் கௌரவ  துணைத் தூதரகம் திறப்பு

துருக்கியின் வரலாற்று நகரான பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், துருக்கிக்கான இலங்கை தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா மேயர் அலினூர் அக்தாஸ், பர்சாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பர்சா ஆளுநரகத்தின் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வமாக கடந்த செப்டம்பர் 25ஆந் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வரலாற்று நகரமான பர்சாவில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறப்பதன் மூலம் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கனவே இருக்கும் நட்புறவு மற்றும் சகோதர உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஹசன் தெரிவித்தார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் பர்சா துருக்கியின் 4வது பெரிய நகரமாவதுடன், ஒட்டோமான் பேரரசு அதன் முதல் இராச்சியத்தை அமைத்ததன் பின்னர் செழித்து வளர்ந்த பகுதியாக பொருளாதாரத்தின் இரண்டாவது பெரிய பகுதியாகவும் கருதப்படுகின்றது.

பர்சாவின் கௌரவ துணைத் தூதுவராக அதிகாரப்பூர்வமாக  அஹ்மத் யில்டிஸை தூதுவர் நியமனம் செய்தார். தனது கருத்துகளின் போது, இலங்கைக்கான புதிய வர்த்தக வாய்ப்புக்கள், சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பர்சா பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை  யில்டிஸ் உறுதியளித்தார்.