சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி துருவப்படுத்தல்கள்

சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி துருவப்படுத்தல்கள்

என்.ஜே. செரோன் அனாஸ் 

எமது நாட்டின் சமூக ஊடகங்களில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவு பேசப்பட்ட விடயங்களில் ஒன்றாக கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் அமைந்துள்ளது.

அதாவது மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் சுமார் 17 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குறித்த சட்ட மூலத்துடன் தொடர்புடைய ஹேஷ்டேக் மூலம் இது தொடர்பான மும்முனைப் போட்டி தன்மையுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் ஆதரவாக கருத்துக்களை ஒரு குழுவும், மற்றைய பிரதான குழுவினர் இச்சட்ட மூலம் உயர் கல்வியை இராணுவமயமாக்கல், பல்கலைக்கழக ஆணைக்குழுவின் உடைய சுயாதீன தன்மையை கேள்விக்குறியாக்கும் மற்றும் உயர் கல்வியை தனியார் மயப்படுத்தலை ஊக்குவிப்பு செய்யும் எனவும் தமது வாதங்களை முன்வைத்தனர்.

மூன்றாவது குழுவினர்  இவ்விரு குழுக்களுடைய  கருத்துக்களில் இருந்து சற்று மாறுபட்டு நடுநிலையான வாதங்களை முன்வைத்தனர். இவ்வாறு சமூக ஊடகங்களின் செல்வாக்கினால் கருத்துக்கள் எதிரெதிர் குழுக்களாக நின்று பேசுபொருளாக மாற்றமடைய செய்வதில் செய்தித் துருவப்படுத்தல்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.

இன்று இலங்கை போன்ற நாடுகளின் ஊடகத்துறையில் செய்தித் துருவப்படுத்தல்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தினால் மறுதலிக்க முடியாத கருப்பொருளாக அமைந்துள்ளது. செய்தி துருவப்படுத்தல்கள் தொடர்பாக சமூக ஊடக பாவனையாளர்கள் மற்றும் வாசகர்கள் தெளிவான அறிவினை கொண்டிருத்தல் ஊடகப் போராக அமைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற விடயங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்தி துருவப்படுத்தல்களுக்கு உள்வாங்கப்பட்டிருந்தன என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு  மேற்பட்ட சமூக ஊடக பதிவுகளில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் பெயர் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்ட மூலம் என்பதாக பகிரப்பட்டடு இருந்தது.

இதன் மூலம் இச்  செய்தியானது 1.5 மில்லியன்  சமூக ஊடகப் பாவனையாளர்களை அண்ணளவாக சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனினும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த சட்டமூலத்தில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் என்பதாகவே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் சமூக வலைத்தளங்களில் வாசகர்களை குழப்பம் அடையச் செய்வதற்காக ஒரு முனையிலிருந்து செய்தி துருவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரதான காரணமாக அமைவது குறித்த சட்ட மூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்காக முயற்சித்துள்ளனர் என்பதாகும்.

இதன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் மற்றும் சமூக ஊடக பாவனையாளர்கள் மத்தியில் குறித்த சட்ட மூலம் தொடர்பான தவறான புரிதல்கள் மற்றும் பீதியை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவுத் தளங்களை பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதனை பயன்படுத்தி இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தப்பட  ஊக்குவிப்பு செய்யும் எனவும் நாடளாவிய ரீதியில் தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் பாடசாலைகள் மற்றும்  தனியார் கல்வி கேந்திர நிலையங்களை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்களை அரச தரப்பினர் மேற்கொள்கின்றனர் எனவும் மக்கள் மத்தியில் குற்றம் சாட்டி இருந்தனர்.

இவ்வாறு செய்தித் துருவப்படுத்தல்களை மேற்கொள்வதன் ஊடாக அரசினுடைய கல்விக் கொள்கை மீது பொதுமக்களை அதிருப்தி அடைவதற்காக முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட பதிவுகளில் நாடளாவிய ரீதியில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகமானது புதிய தனியார் பாடசாலைகளை ஸ்தாபிக்க உள்ளதாகவும் இவற்றினுடைய நிர்வாகம் இராணுவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் நாட்டினை இராணுவ மயப்படுத்தலுக்கு உற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இத்தகைய பதிவுகளை அதிகமான சமூக ஊடகப் பாவனையாளர்கள் தமது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. இவற்றின் விளைவாக சாதாரண குடிமக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணியில் அரசியல் ரீதியாக காய்நகர்த்தல்கள் இடம்பெறுவதாக சமூக ஊடகங்களில் பின்னூட்டங்கள் பலவும் வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக அமைந்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் உடைய நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வாசகங்களை இதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் 500க்கும் மேற்பட்ட பதிவுகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை கேள்விக்குறியாகி விடும் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தன. அதாவது இச்சட்ட மூலத்தின் பிரகாரம் குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையில் சுமார் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் இராணுவ அதிகாரிகள் என்பதாக பகிரப்பட்டு வந்தது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் குறித்த செய்தியானது மும்முனை கருத்துக்கனைகளாக  வலம் வந்தன. முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படுகின்ற சில சரத்துக்களை தமது அரசியல் உள்நோக்கங்களை வெற்றி கொள்வதற்காக குறிப்பிட்ட சில சமூக ஊடகப் பாவனையாளர்கள் செய்தித் துருவப்படுத்தல்களை சாதனமாக பயன்படுத்தியுள்ளனர்.

ஆகவே இவைகள் தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கில் நாம் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக ஒரு சில விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் ஒரு நடுநிலையான தெளிவை பெற  உறுதுணையாக அமையும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் மூன்றாவது பிரதமரான மறைந்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலவின் 48 ஏக்கர் அதாவது 190,000 மீட்டர் வர்க சதுர அடி கந்தவல பரப்பில் இலங்கை முப்படை வீரர்களான இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு உத்திகள் சம்பந்தப்பட்ட கல்வியை வழங்குவதற்காக ஜெனரல சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகடமியாக (KDA) ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் 1981ஆம் ஆண்டின் 68ஆம் இலக்க பாராளுமன்ற சட்ட மூலத்தின் மூலம் சட்ட அந்தஸ்தை இந்த நிறுவனம் பெற்றுக்கொண்டது. 1980ஆம் மற்றும் 1986ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உதவியோடு பொறியியல் பீட கல்வியை தொடர்ந்த கடேட் நிலதாரிகளுக்கு இளமானி பட்டங்களை வழங்கியது.

பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில்  1988ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்ட மூலத்தின் ஊடாக சுயாதினமாக  பட்டம் வழங்கும் அந்தஸ்தையும் பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்  காலத்தில் அதாவது 2007.03.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வரைபிற்கு  ஏற்ப பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரச பல்கலைக்கழக அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டது.

இதன் பின்னர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றது. இதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வளாகம் 2015.05.05ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் பின்னர் 2017.05.21ஆம் திகதி இப்பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலை வளாகம் கொழும்பு மாவட்டத்தின் வேரஹெரவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பொது மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில்  பங்காற்றி வருகின்றது.

இந்த பின்னணியில் 2012 ஆம் ஆண்டு முப்படை - சிவில் உறவை மேம்படுத்துவதற்காக  யுத்ததின் பின்னர் புலமைப்பரிசில் அடிப்படையில் சிவில் மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காக சிவில் மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர்.

இன்றுடன் சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட கல்விச் சேவையினை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கின்றமை முக்கிய அம்சமாகும்.

அடுத்த கட்டமாக கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் உருவாக்கம் சம்பந்தமாக உற்று நோக்குவோம். இச்சட்ட மூலம் KNDA Bill என சமூக வலைத்தளங்களில் பிரபலம் பெற்றது.

குறிப்பாக  ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் பொதுஜன ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.

இந்த உலகப் பெருந்தொற்றுமிக்க காலப்பகுதியில் செய்தி பெரும் தொற்றாக பல்வேறு கோணங்களில் பரப்பப்பட்ட விடயமும் இதுவாகும். குறிப்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், இலவசக் கல்வியை பாதுகாக்கும்   மாணவர் ஒன்றியம் மற்றும் பல சிவில் அமைப்புக்கள் கல்வியை இராணுவ மயமாக்கல் மற்றும் இலவசக் கல்வியை தனியார் மயமாக்கல் எனும் தொனிப்பொருளில் இச்சட்ட மூலத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல மக்கள் எதிர்ப்பு பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்ட மூலமானது 2010ஆம் ஆண்டளவில் சட்ட வல்லுனர்களினால் வரைய ஆரம்பிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு நல்லாட்சி காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.

பின்னர்  மீண்டும் 2021 ஆம் ஆண்டு  ஜூலை  மாதம் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு   பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் கூடிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்ஹ மற்றும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதற்கமைய இந்த சட்டமூலம் ஜூலை கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னர் பாதுகாப்புத் தரப்பினரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கிவந்த இந்தப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சாதாரண மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் இது விஸ்தரிக்கப்பட்டது.

இச்சட்டமூலத்தின் மீதான மூன்றாம் கட்ட வாசிப்புக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் ஏனைய நிபுணர்களின் கருத்துக்களை மேலும் உள்வாங்கும் நோக்கில் குறித்த தினத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட கூடாது எனக்கூறி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சமூக வலைத்தளங்களில் இவை தொடர்பான பல்வேறுபட்ட திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் நாள்தோறும் வலம் வந்தன.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பின்வருமாறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். "அதாவது குறித்த சட்ட மூலமானது  அப்   பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான அடிப்படையை வழங்குவதாகவும். மாறாக இச்சட்ட மூலத்தின் மூலம் கல்வியை இராணுவ மயமாக்கல் அல்லது தனியார்மயமாக்குதல் இடம்பெறாது" என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில் "இப்பல்கலைக்கழகமானது தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையிலான விடயதானங்களில் மாணவர்களை உருவாக்குவது தொடர்பில் இந்தப் பல்கலைக்கழகம் மீது பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்திற்கிடையில் உயர்ந்த மதிப்பு மற்றும் கேள்வி ஏற்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடநெறிகள் பூர்த்தி செய்யப்படுவது இதற்குப் பிரதான காரணம்" என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தப் பாடநெறிகள் யாவும் உயர்ந்த தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை வழங்குவது என்ற ஜனாதிபதியின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் செயற்படும் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார். 

இந்த சட்டமூலம் 2009ஆம் ஆண்டிலேயே முதலில் ஆரம்பமானது. 12 வருடங்களுக்கு மேலாக இச்சட்டமூலம் காணப்படுகிறது. நிபுணர்கள் பலர் இணைந்து இதனைத் தயாரித்து சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளின் பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அப்போது பாதுகாப்பு அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன இதனை முன்வைக்க முயற்சித்தபோதும் பல்வேறு காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச் சட்ட மூலம் தொடர்பில் பரப்பப்படும் செய்தித் துருவப்படுத்தல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், "முன்னாள் பிரதமர் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவலவினால் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணியில் 1981ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கான சட்டமூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளபோதும் தேசிய பல்கலைக்கழகத்துக்குத் தேவையான கட்டமைப்பு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை" என்றார்.

இச்சட்ட மூலம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர்களிடம் சில கருத்துக்களையும் பெற்றுக் கொண்டோம். பின்வருமாறு தமது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

"கொரோனா அசாதாரண சூழ்நிலை நாட்டில் நிலவும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அதிகாரங்களை மழுங்கடிக்கச் செய்யும் வகையிலும் நாட்டின் உயர் கல்வியை இராணுவமயமாக்கலுக்கு உற்படுத்தி மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை வலுவிழக்கச் செய்வதற்காகவும் மிக அவசர அவசரமாக இச்சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது" என்றார்.

இது தொடர்பாக மற்றுமொரு மாணவ ஏற்பாட்டாளர் பின்வருமாறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். "இச்சட்ட மூலத்தின் மூலம் நாடு பூராகவும் தனியார் பாடசாலைகள் தனியார் பல்கலைக்கழகங்கள் பலவற்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாகவும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இன்றி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட  வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் செய்தி துருவப்படுத்தல்களை கண்டறிவதற்கான உத்திகள் தொடர்பில் சற்று நோக்குவோம். இதற்காக மேலே முன்வைக்கப்பட்டுள்ள உதாரணம் சாலச் சிறந்த ஒரு விடயமாகும்.

ஒரு செய்தி தொடர்பிலான உண்மை தன்மையை கண்டறிவதற்காக அச்செய்தியோடு தொடர்புடைய இரு தரப்பினரின் கருத்துக்களையும் உள்வாங்கி கொள்வது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். இவற்றுக்கு மேலதிகமாக அச்செய்தி தொடர்பான மேலதிக தேடல்களையும் ஆய்வுகளையும் வாசகர்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மேலும் அச்செய்தியின் உடைய உள்ளடக்கத்தை நடுநிலையாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் அச்செய்தியை வெளியிட்டவர் மற்றும் அச்செய்தி பரப்பப்படும் நோக்கங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அச்செய்தியின் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம். இதன்மூலம் செய்தித்திருவப்படுத்தல்கள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதுகாத்துக் கொள்வோம்.