கூரகலைக்கு ஜனாதிபதி விஜயம்; புண்ணியஸ்தலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

கூரகலைக்கு ஜனாதிபதி விஜயம்;  புண்ணியஸ்தலத்தின் நிர்மாணப்  பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

கூரகலை புண்ணியஸ்தலத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் பலாங்கொடையிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கல்தொட்ட பள்ளத்தாக்கிலேயே கூரகலை புண்ணியஸ்தலம் அமைந்துள்ளது. மஹ ரஹதன் துறவிகள் வாழ்ந்த 13 கற்குகைகளைக் கொண்ட கூரகலை புண்ணியஸ்தலம், நீண்ட வரலாற்றைக் கொண்டது.

இன்று (16) பிற்பகல் கூரகலை புண்ணியஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு நிர்மாணிக்கப்பட்டுவரும் தாதுகோபுரம், புத்தர் சிலை மற்றும் தர்ம மண்டபத்தின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டார்.

நெல்லிகலை சர்வதேச பௌத்த நிலையத்தின் ஸ்தாபகர் சங்கைக்குரிய வத்துரகும்புரே தம்மரதன தேரர் தலைமையிலும் வழிகாட்டலிலும், கூரகலை விஹாரை வளாகத்தின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, புண்ணியஸ்தலம் சார்ந்த வீதிக் கட்டமைப்பு மற்றும் 2,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தர்ம மண்டபத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புண்ணியஸ்தலத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடம் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், விஹாரையின் சுற்றுவட்டாரத்தையும் பார்வையிட்டார்.

அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சி, ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

2022ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவினை கூரகலையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.