நாமல் குமாரவின் கருத்திற்கு ஜம்இய்துல் உலமா கண்டனம்

சர்ச்சைக்குரிய நாமல் குமார கடந்த 2022.02.28ஆம் திகதி சமூக ஊடகமொன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில்இ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் புனித அல்குர்ஆன் ஆகும் என்ற கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அல்குர்ஆன் அமைதியையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் புனித வேதமாகும். இதற்கு அதன் போதனைகள் ஆதாரமாக அமைகின்றன. உலகத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினார்கள் என்பதை வரலாறு சான்று பகர்கின்றது.

இலங்கை சனத்தொகையில் 9.7 வீதம் மக்களாலும், உலகளவில் 1.8 பில்லியன் மக்களாலும் பின்பற்றப்படக்கூடிய புனித அல்குர்ஆனையும், இறுதித் தூதரையும் இழிவாக பேசி அறிவுப்பூர்வமற்ற முறையில் விமர்சிப்பதானது உள்நாடு மற்றும் சர்வதேச முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களின் உணர்வுகளை நிந்திக்கக்கூடிய வகையிலும் மக்கள் மதிக்கக்கூடிய விடயங்களை அகௌரவப்படுத்தும் வகையிலும் பயன்படுத்துவது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய அதேநேரம் அதற்கெதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சுய இலாபம் கருதி மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் இவ்வாறான பேச்சுக்களுக்கெதிராக அவசர நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று உரிய அதிகாரிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அவசரப்படாமல் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்பட வேண்டுமென்றும், முஸ்லிம்களை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த விளையும் இவ்வாறான நபர்கள் வரலாறு நெடுகிலும் காணப்பட்டுள்ள அதேநேரம் இவ்விடயங்களை முஸ்லிம்கள் அறிவு ரீதியாகவும் தூரநோக்குடனும் அணுக வேண்டுமென்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது" என்றார்.