துருக்கியின் தெற்காசியக் கொள்கை - ஒரு மதிப்பீடு

துருக்கியின் தெற்காசியக் கொள்கை - ஒரு மதிப்பீடு

P.K. பாலச்சந்திரன்

பரந்துபட்ட உலகில் மேலோட்டமாக "மூலோபாய சுயாட்சியை" தேர்ந்தெடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இது ஒரு நாட்டை முன்னர் உள்ள கூட்டணிகளின் பிடியிலிருந்து விடுவித்து அதன் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க உதவுகிறது.

இது ஒரு நாட்டிற்கு விரோதமான சர்வதேச குழுக்களிடையே செல்வதற்கும், சிறந்த இருதரப்பு பேரங்களை நடாத்தவும் உதவுகின்றது. மூலோபாய சுயாட்சி மண்டலத்தில், நிரந்தர எதிரிகளோ நிரந்தர நண்பர்களோ இல்லை.

சில பொருளாதார வெற்றிகளை அடைந்துள்ள பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தங்களின் புதிதாக கண்டறியப்பட்ட பலத்தை கட்டியெழுப்புவதற்கு மூலோபாய சுயாட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளன.

இந்தியாவும் துருக்கியும் இந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. ஆனால் மூலோபாய சுயாட்சி அதன் பாதையில் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளுக்கு வழிவகுக்கும் குறுகிய நோக்கினையும் திட்டமிடப்படாத நடவடிக்கைகளையும் கொண்டுவருகிறது.

இத்தகைய திட்டமிடப்படாத நடவடிக்கை, குறுகிய நோக்குடைய கொள்கைகள், தேசிய வளர்ச்சி, நீடித்த சமாதானம் மற்றும் கூட்டான சர்வதேச அபிவிருத்திக்கான பிரதான வாய்ப்புகளைத் தடுக்கலாம்.

மேலும் பல நாடுகளால் குறுகிய கால இலக்குகளைப் பின்தொடர்வது, மாற்று ஒழுங்கினை வழங்காமல் உலக ஒழுங்கினை சீர்குலைக்கும். ஆனால் குறிப்பாக வர்த்தகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான சர்வதேச உறவுகளின் நடத்தைகளில் ஒருவித ஒழுங்கு அல்லது ஸ்திரத்தன்மை அவசியமாகும்.

உள்நாட்டு எதேச்சதிகாரத்துவத்திற்கான இணைப்பு

மூலோபாய சுயாட்சி மற்றும் உள்நாட்டு எதேச்சதிகாரத்திற்கான தேடலுக்கு இடையே ஒரு தூய்மையான தொடர்பை அறிஞர்கள் கண்டுள்ளனர். மேலும் உள்நாட்டு எதேச்சதிகாரம் என்பது உணர்வுபூர்வமாக பிணைக்கும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

துருக்கியில் அது மறுமலர்ச்சி பான் - இஸ்லாமியமாகவும், இந்தியாவில் இந்துத்துவமாகவும் உள்ளது. இந்த பிரபலமான சித்தாந்தங்கள் ரசிப் தைய்யிப் எர்டோகனுக்கும் நரேந்திர மோடிக்கும் சர்வதேச உலகில் மூலோபாய சுயாட்சியைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குகின்றன.

உண்மையில், சர்வதேச உறவுகளில் மூலோபாய சுயாட்சி என்பது இந்தத் தலைவர்கள் வெகுஜனங்களுக்கு விற்ற தேசியவாதப் பொதியின் ஒரு பகுதியாகும். மேலும் மக்கள் தாங்கள் பெறும் அதிகார உணர்வில் மகிழ்வடைகின்றார்கள்.

துருக்கி, இந்திய வெளியுறவு உறவுகள்

துருக்கி மற்றும் இந்தியாவின் வெளியுறவுகள் "மூலோபாய சுயாட்சியை" பின்பற்றுவதன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன. துருக்கி இன்னமும் நேட்டோவின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தியா அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தாலும், இரு தரப்பினரும் சில ஆதாயங்களைப் பெறுவதற்காக இந்த குழுக்களில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டனர்.

நேட்டோவின் உறுப்புரிமை மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், துருக்கி ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்கியது. அமெரிக்காவுடன் "மூலோபாய கூட்டாண்மை" இருந்தபோதிலும், இந்தியாவும் S-400 இனை வாங்கியது.

ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதற்காக ஐ.நா.வில் துருக்கி வாக்களித்தது, ஆனால் ரஷ்யா-உக்ரைன் சர்ச்சையில் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதால் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளில் இணைவதறகு உடன்படவில்லை.

உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதற்கு போர் வழியில்லை என்று இந்தியாவும் சொல்லவில்லை. உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகும் ரஷ்யாவுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளை மேற்கத்தியர்கள் கேள்வி எழுப்பியபோது, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்குலகம் அதன் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது, உலகளாவிய தெற்கின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அல்ல என்று பதிலளித்தார்.

பெய்ஜிங்குடன் நெருங்கிய உறவுகள் இருந்தபோதிலும், சின்ஜியாங் உய்குர் முஸ்லிம்கள் பிரச்சினையில் UNHRC இல் சீனாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதில் துருக்கி அமெரிக்காவுடன் இணைந்தது. சீனாவுடன் நீண்ட கால எல்லைப் பிரச்சினை இருந்தும் இந்தியா வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது.

உலகெங்கிலும் உள்ள கடுமையாக அழுத்தப்படும் முஸ்லிம்களை ஆதரிக்கும் அதனுடைய வேரூன்றிய கொள்கையால் துருக்கி உந்தப்பட்டதையும், சீனாவுடனான தனது உறவிலுள்ள இடைவௌியை மேலும் அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை என்பதையும் வாக்களிப்பு முறைமை வெளிப்படுத்தியது. இரண்டும் மூலோபாய சுயாட்சிக்கான உதாரணங்களாகும்.

துருக்கி - இந்தியா உறவுகள்

ஆனால், இந்தியா - துருக்கி உறவுகளை ஆராய்ந்தால், மூலோபாய சுயாட்சிக் கொள்கை அதன் பின்னடைவையும் கொண்டுள்ளது தெரிகின்றது.

இந்தியா - துருக்கி உறவுகள் பரந்த சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளன, ஏனெனில் இரண்டுமே கைத்தொழில்மயமான நாடுகளாக பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன.

2021-22ல் இருதரப்பு வர்த்தகம் 10.70 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்திய நிறுவனங்கள் 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை துருக்கியில் முதலீடு செய்துள்ளதுடன் இந்தியாவில் துருக்கிய முதலீடுகள் 223 மில்லியன் டொலர்களாக உள்ளன.

ஆனால் இன்னமும், இந்திய - துருக்கி உறவுகள் சுமூகமானதாக இல்லை. இருவருமே ஒருவருக்கொருவர் நன்மையளிக்கும் பெரிய, நீண்ட கால நலனைக் காட்டிலும், குறுகிய அரசியல் அல்லது கருத்தியல் நலன்களால் குறிக்கப்பட்ட மூலோபாய சுயாட்சியைப் பின்பற்றுவதுடன் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

காஷ்மீர் அல்லது சைப்ரஸ் போன்ற குறுகிய தேசியவாத பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் எழுப்பாமல் இருந்திருந்தால் மட்டும் இரு நாடுகளும் பில்லியன் டொலர்களை சம்பாதித்திருக்க முடியும்.

சமீபத்திய UNGA அமர்வில், எர்டோகன் மீண்டும் இந்தியாவின் காஷ்மீர் கொள்கைக்காக விமர்சித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரித்தால், துருக்கியின் வடக்கு சைப்ரஸ் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சைப்ரஸில் உள்ள கிரேக்க சைப்ரஸ்களை இந்தியா ஆதரிக்கும் என்று எர்டோகனிடம் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காக, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் அயோனிஸ் கசோலிடெஸை சந்தித்தார்.

சர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபாக் பகுதி தொடர்பாக ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நடந்து வரும் சர்ச்சையில், இந்தியா கிறிஸ்தவ ஆர்மீனியாவை ஆதரித்த அதே நேரம் துருக்கி முஸ்லீம் நாடான அஜர்பைஜானை ஆதரித்தது.

இந்த குறுகிய தேசியவாத இந்திய மற்றும் துருக்கிய நகர்வுகள், அக்டோபரில் சமர்கண்டில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் பகுதியாக மோடி - எர்டோகன் சந்திப்பால் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளை வீணாக்கியது.

உள்நாட்டு மூல காரணிகள்

பிரச்சினையின் மூலகாரணிகள் எர்டோகன் மற்றும் மோடி ஆட்சிகளின் உள்நாட்டு அரசியல் தேவைகளில் உள்ளது. எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி (AKP) தீவிர இஸ்லாமிய அமைப்பென்பதுடன், உலக இஸ்லாமிய சமூகம் அல்லது உம்மாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துருக்கி, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இஸ்லாமிய உலகின் தலைமையை கைப்பற்ற விரும்புகின்றது. இந்தப் பின்னணியில், துருக்கி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மையமாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

தீவிரவாத இஸ்லாம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்லாமிய அமைப்பான Popular Front of India (PFI) உடன் துருக்கிய அரச சார்பற்ற நிறுவனமான Insan Hak ve Hurriyetleri ve Insani Yardim Vakfi (IHH) தொடர்பு கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீவிர காஷ்மீரி இளைஞர்களை இஸ்தான்புல் மற்றும் அங்காராவுக்கு மாற்ற துருக்கி ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி (BJP) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் மற்றும் பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் மீது இந்துத்துவ சக்தியைக் திணிக்கின்றது. இது இஸ்லாமிய துருக்கியின் கோபத்தை தூண்டுகிறது.

பரந்த கண்ணோட்டம் தேவை

இந்திய வர்ணனையாளர்களான அனுத்தமா பானர்ஜி மற்றும் நிரஞ்சன் மர்ஜானி, காஷ்மீர் விவகாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பாகிஸ்தானின் விடயம் சார்பாக நிலையெடுப்பதை விட, பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவுடன் நல்லுறவு கொள்வதால் துருக்கி அதிகமாக நன்மையடை முடியும் என வாதிடுகின்றனர்.

ஆசியா மற்றும் ஐரோப்பாவின் குறுக்கு பாதையில் உள்ள கைத்தொழில்மயமான நாடான துருக்கியுடனான நல்லுறவால் இந்தியாவும் ஆதாயம் பெறும். இந்தியாவும் துருக்கியும் ஒரு சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் அல்லது ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திடலாம்.

ஆனால் குறுகிய நலன்கள் இந்த சாத்தியங்களைத் தடுத்துவிட்டன. வட சைப்ரஸ் மற்றும் நாகோர்னோ - கராபாக் பிரச்சினைகளில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் துருக்கி காஷ்மீர் பிரச்சினையை கைவிட வேண்டும் என்றும் வர்ணனையாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எவ்வாறாயினும், இவை ஒரு தீவிரமான போட்டி நிறைந்த சர்வதேச அரசியலில் உள்ள நிறைவேறாக் கனவுகளென்பதுடன், அங்கு வரும் ஒவ்வொரு நாடும் குறுகிய நோக்குடையதும் மற்றும் குறுங்காலத்ததுமான தேசிய நலன்களைத் பின்பற்றுவதற்காக மூலோபாய சுயாட்சியைப் பிரயோகிக்க விரும்புகிறது.

தெற்காசியாவின் ஏனைய பகுதிகளுடனான உறவு

துருக்கி தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளை கொண்டுள்ளது. ஆனால் இந்த உறவுகளின் சில அம்சங்கள் இந்தியாவுடனான அதன் உறவுகளை பாதிக்கலாம்.

2016 மற்றும் 2019 க்கு இடையில் துருக்கியின் ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு மொத்தம் 112 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. துருக்கி பாகிஸ்தானின் நான்காவது பெரிய ஆயுத ஆதாரமாக உள்ளதுடன், இது அமெரிக்காவை மிஞ்சியுள்ளது.

நான்கு MILGEM Ada-class corvettes மற்றும் 30 T-129 Atak ஹெலிகொப்டர்கள் வாங்குவது உட்பட, 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான பாகிஸ்தானின் சமீபத்திய வழங்கல் கட்டளைகளை துருக்கி நிறைவேற்றுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆனால் துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த இராணுவ ஒப்பந்தங்கள் இஸ்லாமாபாத்துடன் நிரந்தரமாக மோதலில் இருக்கும் புது டெல்லியுடனான அங்காராவின் உறவுகளை மோசமாக பாதிக்கலாம்.

துருக்கியிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் நான்காவது பெரிய நாடாக வங்காளதேசம் உள்ளது என்பதை வெளியிடப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 2013 இல், துருக்கி வங்காளதேச இராணுவத்திற்கு ஓட்டோகர் கோப்ரா இலகுரக கவச வாகனங்களை வழங்கியது.

துருக்கிய நிறுவனமான Delta Defense, 680 இலகுரக கவச வாகனங்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 2017 இல் பெற்றது. வங்காளதேச இராணுவத்திற்கு நடுத்தர அளவிலான வழிகாட்டும் பல ராக்கெட் செலுத்திகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மார்ச் 2019 இல் துருக்கி பெற்றது.

2021ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், வங்களாதேசம் துருக்கியின் மொத்த ஆயுத விற்பனையான 1 பில்லியன் அமெரிக்க டொலரில்   60 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை துருக்கியிலிருந்து இறக்குமதி செய்தது. 

2021-22 நிதியாண்டில் வங்காளதேசம் தனது இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு 4.45 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியிருப்பதால் சாத்தியக்கூறு மிக அதிகமாகவுள்ளது. ஒரு கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற முயற்சியும் பேச்சுவார்த்தையில் உள்ளது.

எவ்வாறாயினும், வங்களாதேசம் தனது செல்வாக்கு எல்லைக்குள் இருப்பதாக இந்தியா கருதுவதாலும், இந்திய வன்பொருளை வாங்க நிதி வழங்கியதாலும், வங்களாதேசம் துருக்கியிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களை வாங்குவது இந்தியாவின் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் டாக்காவும் மூலோபாய சுயாட்சியை விரும்புவதுடன், சில சமயங்களில் இந்தியாவுடனான சுமூகமான அயல் உறவு பாதிக்கப்பட்டாலும் கூட, துருக்கியுடனான அதன் உறவுகளை விட விமர்சனத்திற்குரிய பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான உறவு

ஆப்கானிஸ்தானில் துருக்கி ஒரு வகிபாகத்தைக் கொண்டுள்ளதுடன், அமெரிக்கா தலிபான் அரசாங்கத்திற்கு இடைத்தரகராக துருக்கி இருப்பதை விரும்புகிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தோனி பிளின்கன் துருக்கியை "ஒரு முக்கியமான நேட்டோ கூட்டாளி" மற்றும் "பிராந்தியத்தில் விலைமதிப்பற்ற பங்குதாரர்" என்று அழைக்கிறார்.

இருப்பினும், துருக்கி ஆப்கானிஸ்தானின் துருக்கிய மக்கள் மற்றும் உஸ்பெக்ஸ், துர்க்மென்ஸ் மற்றும் பிறர் போன்றவர்களுடனான தனது உறவைப் பயன்படுத்தி, இந்த துருக்கிய சமூகங்களிடையே தனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதற்கான அதன் குறுகிய ஆர்வத்திற்கு செயற்படலாம். ஆனால் அது துருக்கியரல்லாத பஷ்டூன் ஆதிக்கத்தில் உள்ள தலிபான்களை அந்நியப்படுத்தும்.

நேபாளம், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடன் உறவு

நேபாளத்திற்கு வெள்ளம் மற்றும் நில நடுக்கங்களின் போது துருக்கி மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு 11 இல் இருந்து 14 ஆக அதிகரிப்பதன் மூலம் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது.

ஆனால் மாலைதீவுடனான உறவுகள் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். மாலைதீவு சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வதில் துருக்கிய நிறுவனங்களின் ஆர்வம் பரஸ்பர நன்மையை அளிக்கும் அதே வேளையில், "மாலைதீவில் இஸ்லாமிய மையத்தை நிறுவுவது உட்பட" மத ஒத்துழைப்பை மேம்படுத்தும் திட்டம் புதுடில்லியில் புயலை எழுப்பக்கூடும்.

ஜனாதிபதி அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய இந்தியா தீவிரம் காட்டியதற்கு ஒரு காரணம், அவர் இஸ்லாமியர்களிடம் தங்கியிருப்பதுதான். துருக்கியும் மாலைதீவுகளும் இந்தியாவுடன் உறவுகளை வளர்த்து, அதனுடன் ஒத்துழைப்பதன் பலனை அனுபவிக்க விரும்பினால், இஸ்லாமியத்தை ஊக்குவிக்கும் குறுகிய நலனை தொடர வேண்டாம் என்று நன்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

எனவே, குறுகிய மற்றும் தற்காலிக சுயநலனை அடிப்படையாகக் கொண்ட கொள்கையானது, "மூலோபாய சுயாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது தனது பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் தெற்காசியாவில் நீண்டகால வாய்ப்புகளை தேடுகின்ற துருக்கியின் சாத்தியமான திறன் நோக்கில் இது எதிர்மறையானதாக இருக்கலாம்.

P.K. பாலச்சந்திரன், கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.

Factum என்பது இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய ஆசியாவை மையமாக கொண்ட சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.