சவூதி - இலங்கை உறவு: ஒத்துழைப்பு, நட்புறவின் அடிப்படையில் ஸ்தாபிப்பு: தூதுவர்

சவூதி - இலங்கை உறவு: ஒத்துழைப்பு, நட்புறவின் அடிப்படையில் ஸ்தாபிப்பு: தூதுவர்

சவூதி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் இரு நாடுகளின் தலைமைகளின் அனுசரணையின் கீழ் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
 
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  கடந்த ஜனவரி 22 முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவூதை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் இந்த விஜயத்தின் விளைவாக சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரட்டை வரித் தவிர்ப்பிற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வுடன்படிக்கையில், சவூதி அரேபிய அரசாங்கத்தின் சார்பாக சகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் ஆளுநர் சுஹைல் அபானாமியும், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கைச்சாத்திட்டனர்.

அவ்வாறே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அரேபிய அபிவிருத்திக்கான நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

அபிவிருத்திக்கான சவூதி நிதியம், இலங்கையில்  46 அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக  455 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கைக்கான சவூதி அரேபிய  தூதுவர் குறிப்பிடுகையில்,

"சவூதி அரேபியாவானது, 2021 ஆம் ஆண்டில், 7.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கான நன்கொடையாக வழங்கி, உத்தியோகபூர்வ உதவிகளை (மனிதாபிமான மற்றும் மேம்பாடு) வழங்கும் நாடுகளில் முதலிடத்தைத்  தக்க வைத்துக்கொண்டுள்ளது.
 
இவ்வுதவித்தொகையானது சவூதி அரேபியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 1.05% ஆகும். மேலும் இத்தொகை, உதவி வழங்கும் நாடுகள் தங்களது மொத்த தேசிய வருமானத்தில் 0.7% என்ற தொகையை மேற்குறிப்பிட்ட நாடுகளின் வளர்ச்சிக்காக உத்தியோகபூர்வ உதவியாக ஒதுக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் அதிகமாகும்" என்றார்.