நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலை பேச்சின் கட்டுப்படுத்தலா?

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலை பேச்சின் கட்டுப்படுத்தலா?

முஹம்மது அஃப்தாப் ஆலம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் முன்மொழியப்பட்ட சட்டவாக்கத்தின் மீளாய்வு

செப்டம்பர் 2023 இல், இலங்கை அரசாங்கம் "நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவை" நிறுவுவதற்காக நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியதுடன், இதன் நோக்கம் "தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக போலியான நிகழ்நிலை கணக்குகள் மற்றும் நிகழ்நிலை கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் தவறான விடயங்களின் தொடர்பாடலுக்கான நிதியியல் மற்றும் ஏனைய  ஆதரவை நசுக்குவதுமாகும்".

இதேபோன்ற முயற்சிகள் ஜூலை 2023 இல் பாகிஸ்தானின் ஃபெடரல் அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்டதுடன், அது பாகிஸ்தான் முழுவதும் சமூக வலைப்பின்னல் தளங்களை (SNPs) உருவாக்குதல், பதிவு செய்தல் மற்றும் இயக்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான இலத்திரனியல் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்தது.

பாகிஸ்தானில் உள்ள சட்டமூலமானது தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் 2023, பாகிஸ்தான் இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அதிகாரசபை (திருத்தம்) சட்டமூலம் 2023, உத்தியோகபூர்வ இரகசியங்கள் (திருத்தம்) சட்டமூலம் 2023 மற்றும் பாகிஸ்தான் இராணுவ (திருத்தம்) சட்டமூலம் 2023 உள்ளிட்ட மற்றைய சட்டமூலங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டமூலங்களில் பல ஆகஸ்ட் 19 அன்று தேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் டிஜிட்டல் ஆசிரியர்களின் கூட்டமைப்பு (PDEA), ஆசியா வலைத்தள கூட்டமைப்பு (AIC), டிஜிட்டல் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல பங்குதாரர்கள் இலத்திரனியல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தமைக்கு தீவிர கவலை தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக, சட்டமூலத்தை நிறைவேற்றும் யோசனையை அரசு கைவிட்டது. பின்வரும் சுருக்கம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் சட்டமூலங்கள் தொடர்பான விரைவான கண்ணோட்டமாகும்.

பாகிஸ்தானின் இலத்திரனியல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் 2023

"நிகழ்நிலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நிகழ்நிலை தீங்கைத் தடுப்பதற்குமானது" எனக் கூறுகின்றது. இந்த சட்டமூலமானது  "வெறுக்கத்தக்க பேச்சு, வெறுப்பு குற்றம், வன்முறை, போலிச் செய்திகள் மற்றும் சமூக வலைப்பின்னல்களில் உள்ள பிற சட்டவிரோத உள்ளடக்கங்களை எதிர்க்கவும், [பாகிஸ்தான்] அரசியலமைப்பின் 19 வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள அமுலாக்கங்கள் மற்றும் மட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தவும்" முன்மொழிகிறது.

இந்த சட்டமூலம், பாகிஸ்தானில் இலத்திரனியல் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவி அதன் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களை நியமிப்பதற்கான அல்லது நீக்குவதற்காக மத்திய அரசுக்கு பிரத்யேக அதிகாரங்களை வழங்குகிறது.

இந்த சட்டமூலத்தின் பிரகாரம், பாகிஸ்தானில் சமூக வலைப்பின்னல் தளங்களை (SNPs) நிறுவுதல், பதிவு செய்தல் மற்றும் இயக்குதல்; SNP களில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; அருவருப்பான வன்முறை நடத்தையை ஊக்குவிக்கும், தூண்டும், அறிவுறுத்தும் மற்றும் சித்தரிக்கும் விடயங்களுக்கான அணுகலைத் தடுத்தல்; சட்டத்தின் ஏற்பாடுகள் அல்லது விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை மீறியதற்காக அபராதம் விதித்தல்; மற்றும் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் முறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்க முகவர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்புதல் ஆகியவற்றை அதிகாரசபை ஒழுங்குபடுத்தும்.

இந்த அதிகாரசபையானது "ஒரு சாதனத்தில் உள்ள அல்லது அதில் கிடைக்கக்கூடிய எந்தவொரு தகவல் அல்லது தரவையும் தேடும் நோக்கத்திற்காக, அத்தகைய அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு சாதனம், எந்தவொரு கருவி, தரவு அல்லது வேறு எந்தப் பொருளையும் அணுகுவதற்கான" அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.

இந்த சட்டமூலம் சமூக வலையமைப்பு பதிவுதாரர் (கள்) பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்கம் அல்லது வெளிப்பாட்டின் எந்தவொரு அம்சத்திற்கும் எதிரான முறைப்பாடுகளைப் பெறவும் அவை தொடர்பில் முடிவு செய்யவும் சமூக வலையமைப்பு முறைப்பாடுகள் ஆணைக்குழு (கள்) அல்லது SNCC களை நிறுவுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது.

இது தொடர்பாக, SNCCகளின் தீர்மானங்களுக்கு எதிரான மேன்முறையீடுகளைக் கையாள்வதற்கு சமூக வலையமைப்பு மேன்முறையீட்டு தீர்ப்பாயங்களை மத்திய அரசு நியமிக்கலாம். சமூக வலையமைப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம்.

இந்த சட்டமூலம் அதிகாரசபையில் பதிவு செய்யாமல் SNPஐ நிறுவுதல், செயற்படுத்துதல் அல்லது செயற்பாட்டின் தொடர்ச்சி அல்லது செயற்பாட்டை  தடை செய்கிறது. இது "இணைய தொலைக்காட்சி அலைவரிசைகள், யூடியூப் சேனல்கள் (vlogs உட்பட), நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், Over The Top (OTT) அலைவரிசைகள் போன்ற நிகழ்நிலை தகவல் மற்றும் உள்ளடக்க விநியோக அமைப்புக்களை அதிகாரசபையில் SNP ஆக பதிவு செய்வதை தேவைப்படுத்துகின்றது.

SNP கள் சமூக வலைப்பின்னல் தளங்கள் அல்லது இணையத்தில் பார்ப்பதற்கு கிடைக்கப்பெறும் அத்தகைய உள்ளடக்கம், ஒரு நபர் பதிவுசெய்யப்பட்ட பயனராக மாற, கணக்கை உருவாக்க அல்லது பொது சுயவிவரத்தை உருவாக்க அனுமதிக்கும் Twitter, Facebook, Snapchat, Instagram மற்றும் Tik Tok போன்ற இணைய சேவை பரம்பல் அடிப்படையிலான உள்ளடக்க வழங்கல் சேவை ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றன.

பதிவுசெய்யப்பட்ட அனைத்து SNP களும் பாகிஸ்தானின் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் தேசிய சித்தாந்தத்திற்கு எதிரான உள்ளடக்கம்; எந்தவொரு மதம், பிரிவு, சமூகம் பற்றி இழிவான கருத்துக்கள்; வன்முறையைத் தூண்ட, உதவும், ஊக்கமளிக்கும், கவர்ச்சியானதாக காட்டும் அல்லது நியாயப்படுத்தும் உள்ளடக்கம்; மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது தகுதியான நியாயாதிக்கத்தைக் கொண்ட நீதிமன்றத்தால் காண்பித்தல் அல்லது வழங்குதல் தடைசெய்யப்பட்ட எதனையும் உள்ளிட்ட ஆனால் அதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத எந்தவொரு "தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தையும்" ஒளிபரப்பக் கூடாது.

இந்த சட்டமூலமானது  சட்டம் அல்லது விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளின் ஏதேனும் ஏற்பாடுகளை மீறும் அல்லது தூண்டும் ஒரு SNP செயற்பாட்டாளருக்கு PKR 2 மில்லியன் வரை அபராதம் விதிப்பதற்கு முன்மொழிகிறது. குற்றம் சாட்டப்பட்ட மீறல் மீண்டும் மீண்டும் இடம்பெற்றால், அந்த நபரை மூன்று ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடியும்.

மேலும், நாட்டில் சமூக வலைப்பின்னல் இயங்குதளத்தை இயக்குவதற்கு பதிவு செய்யாத ஒருவரால் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் இடம்பெற்றால், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் PKR 3 மில்லியன் வரை அபராதம் விதிப்பதற்கு சட்டமூலம்  முன்மொழிகிறது.

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டமூலம்

ஆகஸ்ட் 2023 இல் பாகிஸ்தானில் முன்மொழியப்பட்டதைப் பின்பற்றுவது போல தெரிகின்றது. இலங்கை சட்டமூலமானது “இலங்கையில் சில உண்மை அறிக்கைகளை நிகழ்நிலையில் தொடர்பாடல் செய்தல்; தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற நிகழ்நிலை கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தல்; உண்மையின் தவறான அறிக்கைகளின் தகவல்தொடர்பாடலுக்கான நிதியியல் மற்றும் பிற ஆதரவை அடக்குதல் ஆகியவற்றை தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது”.

இந்த சட்டமூலம்   “இலங்கையில் சில உண்மை அறிக்கைகளை இணையத்தில் தொடர்பாடல் செய்வதைத் தடைசெய்வதற்கும் சட்டமூலத்தின் மேலே குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவை நிறுவுவதற்கு முன்மொழிகிறது. அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் இலங்கை ஜனாதிபதிக்கு தற்றுணிபு அதிகாரங்கள் இருக்கும்.

இந்த ஆணைக்குழுவானது  இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு சமூக ஊடக தளங்களை வழங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான ஆணையை கொண்டுள்ளது.

இதனால் இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு இணைய அடிப்படையிலான தொடர்புச் சேவைகளை வழங்கும் சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடைத்தரகர்களுக்கான நடைமுறைக்கோவைகளை வெளியிட முடியும்.

இந்த சட்டமூலமானது  ஒரு தவறான அறிக்கையை "தவறான அல்லது பொய்யானது என்று அதன் தயாரிப்பாளரால் அறியப்பட்ட அல்லது நம்பப்படும் ஒரு அறிக்கையாகவும், குறிப்பாக ஏமாற்ற அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது, ஆனால் ஒரு எச்சரிக்கை, கருத்து அல்லது நல்லெண்ணத்தை உள்ளடக்கியதில்லை"  என வரையறுக்கின்றது. அத்தகைய அறிக்கைகளின் தொடர்பாடலை நிறுத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

சட்டமூலம்  பல்வேறு அறிக்கைகளை "தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்" என்று பிரகடனப்படுத்துகின்றது. இவற்றில் தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக "காட்டிக் கொள்ளப்படும்" அறிக்கைகள் அல்லது வெவ்வேறு வர்க்க மக்களிடையே தவறான விருப்பம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும் அறிக்கைகள்; நீதிமன்ற அவமதிப்புக்குரிய அறிக்கைகள்; "தவறான அறிக்கைகள்" மூலம் வேண்டுமென்றே அவமானப்படுத்துவதன் மூலம் எந்தவொரு தனிநபரையும் தூண்டும் அறிக்கைகள்; மற்றும் பல உள்ளடங்கும்.

ஆணைக்குழுவானது "தடைசெய்யப்பட்ட அறிக்கைகளுக்கு" எதிரான முறைப்பாடளிப்பதற்கான அதிகாரமாக செயற்படுவதுடன் அத்தகைய அறிக்கைகளின் அனைத்து தகவல் தொடர்பாடல்களையும் நிறுத்துவதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்.

மேலும், ஆணைக்குழு இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகருக்கு அறிவித்தல்களை வெளியிடலாம்: இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்கள் அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையை அணுகுவதை முடக்கலாம்; அல்லது அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையை அத்தகைய நிகழ்நிலை இடங்களில் இருந்து அகற்றலாம்.

"தடைசெய்யப்பட்ட அறிக்கை" புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்கும் மனு மீது உத்தரவு பிறப்பிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த சட்டமூலம் அதிகாரமளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால், "குற்றத்தின்" தன்மையைப் பொறுத்து, 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த சட்டமூலத்தின் கீழ், ஆணைக்குழுவானது எந்தவொரு இணையதளம், வலைப்பக்கம், அரட்டை அறை அல்லது மன்றம் அல்லது இணையத்தின் மூலம் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய அல்லது வேறுவிதமாக உணரக்கூடிய எந்தவொரு ஊடகத்தையும் “பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை இருப்பிடம்” என்று அறிவிக்க முடியும்.

சட்டமூலத்தின் கீழுள்ள உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால், அத்தகைய இணையதளம், வலைப்பக்கம், அரட்டை அறையின் உரிமையாளர் அல்லது செயற்பாட்டாளரை ஆறு ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும் என்பதுடன், 10 மில்லியன் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

முன்மொழியப்பட்ட சட்டமூலங்களின் ஆய்வு, முன்மொழியப்பட்ட சட்டங்களின் கட்டமைப்பானது இரண்டுக்கும் இடையே சில அம்சங்களில் வேறுபடுகிறது என்பதை காட்டுகிறது. இருப்பினும், இரண்டுக்குமான உள்நோக்கம் மற்றும் விடயப்பொருளில் பல ஒற்றுமைகள் உள்ளன.

இந்த சட்டமூலமானது ஆணைக்குழு அல்லது அதிகாரசபையின் உறுப்பினர்களை நியமிக்கவும் நீக்கவும் இலங்கையில் ஜனாதிபதிக்கும், பாகிஸ்தானில் உள்ள மத்திய அரசுக்கும் அதிகாரமளிக்கின்றது.

சட்டமூலங்களின் நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள் மிகையானவை, தெளிவற்றவை மற்றும் தவறானவையாகும். இந்த சட்டம் இயற்றப்பட்டால், ஆணைக்குழு (இலங்கையில்) அல்லது அதிகாரசபை (பாகிஸ்தானில்) நிகழ்நிலை உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தவும், தடுக்கவும் மற்றும் அகற்றவும் அசாதாரணமான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

இத்தகைய கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் நிகழ்நிலை தணிக்கை மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தும். 2016 மற்றும் 2020க்கு இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இணையதளங்கள் மற்றும் இணையப் பக்கங்களை பாகிஸ்தானில் உள்ள PTA ஆனது 2016ம் ஆண்டின் இலத்திரனியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (PECA) பிரிவு 37 இன் கீழ் தடை செய்துள்ளது என்பது தெளிவாகிறது.

நிகழ்நிலை சுதந்திரமான பேச்சுக்கு எதிராக குற்றவியல் தண்டனைகளை பரிந்துரைப்பது மிகவும் பிரச்சினைக்குரியதாகும். பாகிஸ்தானில், PECA அமுலாக்கத்திற்கு வந்ததில் இருந்து சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் பிற தகவல்தொடர்பாடல்கள் காரணமாக 25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த சட்டமூலங்களை மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு கலந்தாலோசனைகளும் ஆலோசனைகளும் அவசியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

முஹம்மது அஃப்தாப் ஆலம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊடக சட்ட நிபுணராவார்.