தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் புழல் சிறையில் தடுத்து வைப்பு

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபலின்  பணிப்பாளர் புழல் சிறையில் தடுத்து வைப்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மீன்பிடி படகில் தமிழகம் சென்றபோது கைது செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹாப் ஷெரீம் மற்றும் அவரது மனைவியான பாத்திமா பர்சான ஆகியோர் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது மகன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்த நிலையில், தமிழக கடலோர காவல் படையினரும், Q பிரிவு பொலிஸாரும் அவர்களை கைது செய்திருந்தனர்.

அவர்கள் வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் தடுத்து வைக்குமாறும் சிறுவனை காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் இந்த சம்பவம் தொடர்பில் வினவப்பட்ட போது,

"குறித்த நபர்கள் கல்முனையில் 57 மில்லியன் ரூபாவை மோசடி செய்தவர்கள் என அறியக் கிடைத்துள்ளது. சட்டவிரோதமாக நிதி நிறுவனத்தை நடத்திச்சென்ற அவர்கள் வல்வெட்டித்துறை ஊடாக இந்தியா சென்றுள்ளனர்.

அவர்கள் இலங்கையில் பயன்படுத்திய பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், வேறு பெயர்களைக் கூறியுள்ளதால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என்றார்.