பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் சர்வதேச ஆய்வு மாநாடு – 2021

பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் சர்வதேச ஆய்வு மாநாடு – 2021

இலங்கை பல்கலைக்கழக நூலகர் அமைப்பு தனது வருடாந்த ஆராய்ச்சி மாநாட்டினை இணைய வழியாக எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை நடத்தவுள்ளது.

'ஆராய்ச்சி வெளிப்பாட்டினை அதிகரிப்பதற்கான  திறந்த பெறுகையும் ஆய்வு வெளியீடும்' என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.

சமகால நிலையில் நூலக மற்றும் தகவல் விஞ்ஞானம் எனும் துறையிலுள்ள கல்வியாளர்களின் ஆய்வு வெளியீட்டினை அதிகரித்தலில் கல்விசார் வெளியீடு மற்றும் திறந்த பெறுகை தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள், தீர்வுகள் சம்பந்தமாக விவாதித்தல் - கலந்துரையாடல் மற்றும் அறிவைப் பகிர்தல்  என்பனவற்றிற்கு ஒரு தளமமைத்தல் இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாடு தொடர்பில் மாநாட்டின் தலைவரும் இலங்கை பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவருமான கலாநிதி சம்மிக மல்லவராச்சி கூறுகையில்,

"தனிநபர் ஆராய்ச்சி, நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் இந்த முழுநாட்டினதும் ஆராய்ச்சி வெளியீடுகளை மேன்மைப்படுத்துவதில் நூலகங்கள் முக்கிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளன.

கல்விசார் வெளியீடு என்பது விஞ்ஞான மற்றும் அறிவுடைச் சமூகங்களுக்கிடையில் ஆய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்கின்ற ஒரு வழிமுறை எனலாம். பொருத்தமானதும் தரமானதுமான தகவல்களை இலவசமாகப் பெற்று ஆய்வாளர்களுக்கு உதவி செய்வதில் கல்விசார் வெளியீடுகளின் உள்ளடக்கம் இருக்கின்றது என்பது இன்றைய உலகின் பொதுநிலையாகும்.

திறந்த பெறுகை என்பது ஆய்வாளர்களுக்கு மாத்திரமன்றி நிறுவனங்களுக்கும் ஆய்வின் வெளியீட்டினை அதிகரிப்பதில் மிகமுக்கிய நன்மைககளை வழங்குகின்றது. இதனாலேயே அதிக விளைவைப் பெறக் கூடியதாகவுள்ளது.  எனவேதான் அவர்கள் 2021 இன் ஆய்வு மாநாட்டிற்கான கருப்பொருளாக இதனைத்  தேர்ந்தெடுத்துள்ளனர்" என்றார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கின்றார்.

நூலக நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பின் (IFLA)  தலைவரான திருமதி பார்பரா லிஸ்சன், மனிதநேய விவகார நிலையத்தின் தலைவரான ஜீவன் தியாகராஜா மற்றும்  கொழும்பு பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவகத்தின் (NILIS)  பணிப்பாளர் கலாநிதி பிரதீபா விஜயதுங்க என்போர் ஆய்வரங்க பிரதான  பேச்சுக்களை வழங்குகின்றனர்.  

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகரும் ஆய்வரங்க செயலாளருமான கலாநிதி முகமட் மஜீத் மஷ்றூபா கருத்துத் தெரிவிக்கையில்,

"நூலக மற்றும் தகவல் விஞ்ஞானம் சார் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தமது ஆராய்ச்சி முடிவுகளை இணைய வழியில் முன்வைப்பார்கள். அனைத்து ஆய்வுக் கட்டுரைகளினதும் விரிவான ஆய்வுச் சுருக்கம் இலத்திரனியல் மற்றும் அச்சுமுறை தொகுப்புக்களாக வெயியிடப்படும். அத்துடன், ஆய்வு மாநாட்டின் முழுவெற்றியும் பின்வருவோரது பங்களிப்பிலும் தங்கியுள்ளது" என்றார்.

திரு ஏ.டி.பி. குமார,  இணையத்தள மற்றும் தொழிநுட்ப இணைத்தலைவர் -  கே.எச்.ரி. அபேசேகர, வெளியீடுசார் இணைத் தலைவா - கலாநிதி சமன் இலங்கரத்ன, அனுசரணையாளர் சார் இணைத்தலைவர் -  கலாநிதி ஆனந்த திஸ்ஸ,   நிதிசார் இணைத் தலைவர் - கலாநிதி ஆனந்த திஸ்ஸ, மாநாட்டின் இணைச் செயலாளர்களான - வெ. அழகரெத்தினம் மற்றும் மஞ்சுளா ராஜபக்ச, ஆலோசகர் குழு அங்கத்தவர்கள்,  இலங்கை பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் நிர்வாகசபை உறுப்பினர்கள், உபகுழுக்களின் அங்கத்தவர்கள் என்போராவார்.

இம்மாநாடு எதிர்காலத்தில் இலங்கை பல்கலைக்கழகங்களின்  கல்விசார் வெளியீடுகளையும் ஆய்வ உருவாக்கத்தையும் அதிகரிப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.