கொழும்பு இரட்டைவேடம்!; இலங்கை மீது பாகிஸ்தான் அதிருப்தி

கொழும்பு இரட்டைவேடம்!; இலங்கை மீது பாகிஸ்தான் அதிருப்தி

றிப்தி அலி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பேணுகின்ற நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் 'தமிழன்' வார இதழுக்குத் தெரிவித்தன.

இந்த விடயத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைபட்சமாக செயற்படுகின்றது என பாகிஸ்தான் கூறி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தில் நடுநிலைத் தன்மையினை இலங்கை அரசாங்கம் பேணவில்லை என்ற குற்றச்சாட்டினை பாகிஸ்தான் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சு நடத்தியிருந்தார். 

எனினும், தற்போது இந்தியாவினால் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் இதுவரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபுடன் பேச்சு நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கவலையினை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன்வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த யுத்தம் தொடர்பில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டினை அறிய இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக பாகிஸ்தான் பக்க நியாயங்களை தெளிவுபடுத்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தயாராவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எவரும் அதற்கான சந்தர்ப்பத்தினை இன்னும் வழங்கவில்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தம் தொடர்பில் தெளிவுகளை வழங்குவதற்கு நேரம் ஒதுக்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரனராஜவிடம் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையில் இலங்கை நடுநிலை பேணும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டில் இலங்கை ஒருபோதும் தலையீடாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.