'காஸா மக்களுக்கான இலங்கையின் நன்கொடை UNRWAவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது'

'காஸா மக்களுக்கான இலங்கையின் நன்கொடை UNRWAவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது'

றிப்தி அலி

பலஸ்தீனின் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணியகத்தின் (UNRWA) வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச்  தெரிவித்தார்.

"இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரம் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை கிடைக்கப் பெற்றமைக்கான பற்றுசீட்டினை வெளிவிவகார அமைச்சிற்கு UNRWA உத்தியோகபூர்வமாக அனுப்பியுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இந்நிதி காஸா மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்" என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தெரிவித்தார்

காஸா மக்களின் முக்கியமான தேவையின் தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசாங்கம் வழங்கிய பங்களிப்பிற்கு UNRWA மிகுந்த நன்றியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தினால் அந்நாட்டில் பல்வேறு மனிதாபிமான செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், காஸாவில் இடம்பெறுகின்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காஸா சிறுவர் நிதியத்தினை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படுகின்ற நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிணங்க, முதற்கட்டமாக காஸா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரினை UNRWA விற்கு இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காஸா மக்களுக்கு தமது நன்கொடைகளை வழங்க விரும்புவோர்  இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வைப்புச் செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிதியத்திற்கு இலங்கை மக்கள் தொடர்ச்சியாக பங்களிப்புக்களை செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த நிதி காஸா மக்களுக்கு அனுப்பப்படுவது தொடர்பில் தற்போது  பல்வேறு வகையான போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பரப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், குறித்த நிதி காஸா மக்களுக்கு சென்றடைவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியினை தொடர்புகொண்ட வினவிய போதே இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி UNRWAவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள விடயத்தினை அவர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.