Ayush புலமைப் பரிசில்களுக்காக இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

Ayush புலமைப் பரிசில்களுக்காக இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

ஆயுஷ் (Ayush) புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2020/21ஆம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகள் சார்ந்த UG/PG/PhD கற்கைகளுக்கான புலமைப்பரிசில்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (12) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு திறமையான இலங்கை மாணவர்களை இந்திய அரசாங்கம் தேர்வு செய்கின்றது.

இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையான கல்விக்கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் வரையிலுமான மாதாந்த வாழ்க்கைச் செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன.

அத்துடன் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு மற்றும் வருடாந்த ஒதுக்கீடு ஆகியவையும் இந்த புலமைப்பரிசில்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு சமாந்தரமாக இந்தியாவிலுள்ள சகல ICCR புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கும் முழுமையான சுகாதார பராமரிப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் இணையத்தளத்தில்  www.mohe.gov.lk பெற்றுக்கொள்ளமுடியும்.

விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை eduwing.colombo@mea.gov.in எனும் மின்னஞ்சல் முகவரி அல்லது 0112421605,0112422788 ext-605 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ளலாமெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 2020 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சில் சமர்ப்பிக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.