வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் பிரிவினை பதுளை, அம்பாறையில் திறக்க நடவடிக்கை

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் பிரிவினை பதுளை, அம்பாறையில் திறக்க நடவடிக்கை

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் சேவை பிரிவின் அலுவலங்களை பதுளை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

இவ்வருடத்தினுள் இந்த இரண்டு அலுவலகங்களும் திறக்கப்படும் என வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டார்.

கிராமங்களிலுள்ள மக்களுக்கு நெருக்கமாக அரசாங்க சேவைகளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நிதி நெருக்கடிகளின் மத்தியிலும் இந்த அலுவலங்கள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தமக்கான இழப்பீடுகளைப் பெறுதல், இன்னும் வழங்கப்படாத சம்பளங்கள், சமூக பாதுகாப்பு கொடுப்பனவுகள் ஆகியவற்றைப் பெறுதல், வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு கொண்டுவருதல், சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்துதல் போன்ற சிறப்புச் சேவைகளை இந்த பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்கள் வழங்கும்.

அத்துடன், வெளிநாட்டுச் சிறைகளிலுள்ள மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விடுவித்தல், வெளிநாட்டில் பிறப்பு மற்றும் இறப்புக்களின் பதிவுகள், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருதல் ஆகிய சேவைகளும் இந்த அலுவலகங்களால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.