கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் ஆராயா விசேட குழுவொன்று கல்முனைக்கு விஜயம்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் ஆராயா விசேட குழுவொன்று கல்முனைக்கு விஜயம்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று கல்முனைக்கு  நேரடி விஜயம் செய்யவுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றே கல்முனைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் குறித்த பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்று நியமிக்கப்படும் என சிரேஷ்ட சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் தொடர்பில் சமூக ஊடகங்களில்  கடந்த சில நாட்களாக பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் வக்பு சபையின் தலைவரை தொடர்புகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் கருத்தாடல்கள் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், இந்த பள்ளிவாசலின் நிர்வாகம் தொடர்பிலும், புதிய நிர்வாக நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பிரனர் வக்பு சபைக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக கல்முனைப் பிரதேசத்தினைச் சேர்ந்த புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் ஊர் ஜமாத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைகளில் எது சரி, எது பிழை என்பது தொடர்பில் எம்மால் தீர்மானிக்க முடியாது.  இப்பள்ளிவாசல் தொடர்பில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற எமது வக்பு சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கமைய, வக்பு சபையின் விசேட குழுவொன்று மிக விரைவில் கல்முனைக்கு விஜயம் செய்து அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்தித்து பள்ளிவாசல் நிர்வாக விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இக்குழுவினால் வக்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் இப்பள்ளிவாசலுக்கு குறிப்பிட்ட காலப் பகுதியொன்றுக்கு செயற்படு வகையில் இடைக்கால நிர்வாக சபையொன்று நியமிக்கப்படும்.

அதுவரை அனைத்து தரப்பினரும் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். குறித்த பிரச்சினையினை சமூக ஊடகங்களில் கொண்டு செல்வதன் ஊடாக எந்தப் பிரயோசனமும் கிடைக்காது. எனினும் குறித்த சர்ச்கைக்கு வக்பு சபையினால் விரைவில் தீர்வு வழங்கப்படும்" என்றார்.