கோட்டாவின் மாலைதீவுக்கான விமானப் பயணம்; தகவலறியும் விண்ணப்பம் விமானப் படையினால் நிராகரிப்பு

கோட்டாவின் மாலைதீவுக்கான விமானப் பயணம்; தகவலறியும் விண்ணப்பம் விமானப் படையினால் நிராகரிப்பு

றிப்தி அலி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு மாலைதீவிற்கு தப்பியோடுவதற்காக பயன்படுத்திய விமானம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்தினை இலங்கை விமானப் படை நிராகரித்துள்ளது.

விமானப் படையின் தகவல் அதிகாரி மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஆகிய இருவருமே மேற்படி விடயம் தொடர்பிலான தகவலறியும் விண்ணப்பத்தினை நிராகரித்தனர்.

"2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (ஆ) (i)ஆவது சரத்தின் கீழே இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது" எனவும் விமானப் படை குறிப்பிட்டது.

அரசின் பாதுகாப்பை அல்லது அதன் ஆள்புல இறைமையை அல்லது தேசிய பந்தோபஸ்தை பாதிக்கக் கூடியதாக இருக்குமிடத்து தகவலைப்பெற அணுகுதலுக்கான இச்சட்டத்தின் கீழான வேண்டுகோளொன்று மறுக்கப்படுதல் வேண்டும் குறித்த சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜுலை 9ஆம் திகதி கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய போராட்டத்தினை அடுத்து இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிற்கு கடந்த ஜுலை 13ஆம் திகதி தப்பியோடினார்.

இதனை விமானப் படை உறுதிப்படுத்தியதுடன், இலங்கை அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இந்த விமானம் வழங்கப்பட்டதாகவும் விமானப் படை குறிப்பிட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு தப்பியோடும் போது பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் பிரதானியாவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.