ஏழைகளின் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய தம்பதி

ஏழைகளின் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய தம்பதி

றிப்தி அலி

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் அந்நாட்டு பொலிஸாரால் கடந்த வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45), அவரது மனைவி சல்மா பேகம் (35), இவர்களது மகன் அன்சார் (10) ஆகிய மூன்று பேரும் பைப்பர் படகொன்றில் தமிழக நாகப்பட்டின மாவட்டத்தின் வேதாரண்யம் தொகுதியிலுள்ள உள்ள கோடியக்கரையில் வந்திறங்கிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களை வேதாரண்யம் கடலோர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் எனவும், முதல் கட்ட விசாரணையில் "தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்ததாக" அவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மூன்று நபர்களின் புகைப்படத்துடன் தமிழ் நாட்டு ஊடகங்களில் வெளியாகிய இந்த செய்தி கடந்த சனிக்கிழமை (07) இலங்கையில் வைரலாக பரவியது. இவ்வாறு இலங்கையிலிருந்த தப்பியோடி இந்தியாவில் கைதானவர், கிழக்கின் பல நகரங்களில் இயங்கி 200 கோடி ரூபாவை ஏப்பம் விட்டு தலைமறைவாகியிருந்த பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளரான சிஹாப் ஷெரீம் என்பதே இச்செய்தி இலங்கையில் அதிகம் பேசப்பட காரணமாக அமைந்தது.

அவருடன் அவரது மனைவியான பர்சானா மார்க்கார், இவர்களது மகன் ஆகியோரும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதுடன் பிழையான பெயர், முகவரிகளை தமிழக பொலிஸாருக்கு வழங்கிய விடயமும் தெரிய வந்தது.

இந்திய பொலிஸாரின் அறிக்கை

இதேவேளை, "கோடியக்கரை பஸ் நிலையத்திற்கு அருகில் நள்ளிரவு வேளையில் இந்த குடும்பத்தினை அவதானித்தோம். இதன்போது இவர்களிடம் நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் போது பிழையான தகவல்களை வழங்குகின்றனர் என்பதை நாம் உணர்ந்துகொண்டதை அடுத்தே இவர்களை கைது செய்தோம்.

எனினும், இவர்கள் இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என்ற விடயத்தினை நாங்கள் பின்னர் தான் அறிந்துகொண்டோம்" என வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் எம்.செல்வராஜ், 'இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு' தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பத்தினர் கோடியகரை கடலோரத்தில் வந்திறங்கிய போது அப்பிரதேச மீனவர்களிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கடத்தல் குழுவொன்றின் உதவியுடனே இவர்கள் இந்தியா சென்றமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதேவேளை, "யாழ்ப்பாணத்தின் பலாலி பிரதேசத்திற்கு அருகிலுள்ள மோகன் என்பவருக்கு 60 இலட்சம் ரூபா பணம் கொடுத்தே தாம் இங்கு வந்ததாக" சிஹாப் ஷெரீம் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த படகு தங்களை இறக்கிவிட்டு யாழ்ப்பாணம் திரும்பி விட்டதாக அவர் மேலும் கூறினார். ஆரம்ப கட்ட விசாரணைகள் கடந்த சனிக்கிழமை (07) மாலை நிறைவடைந்ததை அடுத்து, குறித்த மூவரும் வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்தியாவினுள் சட்டவிரோதமாக நுழைந்தமையினால்  1967ஆம் ஆண்டின் கடவுச்சீட்டு சட்டத்தின்  12 பிரிவின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வேதாரண்யம் பொலிஸார், 'இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு' தெரிவித்துள்ளனர்.

இதன்போது,  திருவள்ளுர் மாவடத்திலுள்ள உப சிறைச்சாலையில் சிஹாப் ஷெரீமையும், பர்சானா மார்க்கரை சென்னை புயலிலுள்ள பெண்கள் சிறையிலும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் இவர்களது மகனை நாகப்பட்டினத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.  

நிறுவன பணியாளர்களின் ஊடக மாநாடு

இவ்வாறான நிலையில், பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரினால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) சாய்ந்தமருதில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடத்தினர்.

குறித்த நிறுவனத்தின் கல்முனை கிளையின் முகாமையாளர் யூ.எல்.எம்.சாஜித், சம்மாந்துறை கிளையின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்  ஏ.எச்.ஏ.பாசீல் மற்றும் கல்முனை கிளையின் உத்தியோகத்தர் எம்.இஷ்ஹாக் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அவர்கள் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

"கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சிஹாப் ஷெரீம் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எமது கம்பனியின் பணிப்பாளர்களான இவர்கள் இருவரும் வெளிநாடு செல்ல நீதிமன்றங்களினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களிற்கு எதிராக 40 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக தப்பி  சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவரை நாட்டுக்கு அழைத்து வருவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தினை பெற்றுக்கொடுக்க முடியும்" என்றனர்.

பொலிஸ் பேச்சாளரின் அறிக்கை

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள சிஹாப் ஷெரீம், கல்முனை பிரதேசத்தில்  57 மில்லியன் ரூபாவை மோசடி செய்தவர் என அறியக் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

"சட்டவிரோதமாக நிதி நிறுவனத்தை நடத்திச்சென்ற இவர், தனது குடும்பத்துடன் வல்வெட்டித்துறை ஊடாக இந்தியா சென்றுள்ளார். அவர்கள் இலங்கையில் பயன்படுத்திய பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், வேறு பெயர்களைக் கூறியுள்ளதால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இந்த சம்பவம் தொடர்பில் வினவப்பட்ட போதே  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  மேற்கண்டவாறு கூறினார்.

தப்பிச்செல்ல ஒத்துழைத்தவருக்கு விளக்கமறியல்

இதேவேளை, இவர்கள் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

படகோட்டி என சந்தேகிக்கப்படும் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல், வேறு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்று வந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (09) மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், தப்பிச்செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகின் உரிமையாளர் உட்பட அவரது குடும்பத்தினர் ஐவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டார்.

படகோட்டி மாத்திரமன்றி சிஹாப் ஷெரீம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து தப்பிப்பதற்கு உதவிய அனைத்து தரப்பினரையும் பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இதன் ஊடாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோரின் வலையமைப்பினை கண்டுபிடிக்க முடியும். அது மாத்திரல்லாம், 200 கோடி ரூபா பணத்தினை திட்டமிட்டு கொள்ளையடித்த சிஹாப் ஷெரீமினை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இதன் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களின் பணத்தினை பெற்றுக்கொடுக்க முடியும். அதேவேளை, இந்த நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஒப்பந்தங்களையும், வங்கிகளினால் திருப்பப்பட்ட காசோலைகளையும் வீடுகளில் வைத்துக்கொண்டிருக்காமல் தங்களுக்கு அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும்.

இந்த முறைப்பாடுகளின் ஊடாகவே சிஹாப் ஷெரீமிற்கு எதிராக பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க அனைத்து தரப்பினரும் இணைந்து முயற்சிப்போம்!