பங்களாதேஷூடனான பொருளாதார உறவை வலுப்படுத்த வேண்டியுள்ளது: வெளிநாட்டு அமைச்சர்

பங்களாதேஷூடனான பொருளாதார உறவை வலுப்படுத்த வேண்டியுள்ளது: வெளிநாட்டு அமைச்சர்

பங்களாதேஷுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை கொண்டுள்ள முக்கியத்துவத்தை, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எடுத்துரைத்தார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரெக் எம்.டி. அரிஃபுல் இஸ்லாம் வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சரை அக்டோபர் 07ஆந் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுகளை நினைவு கூர்ந்த அமைச்சர், பல்தரப்புத் தளங்களில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

பிராந்தியத்திற்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் எதிர்கொள்வதற்கும் புத்திசாதுரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டு சுற்றுலாத் தொழில்கள் உட்பட பலதரப்பட்ட இருதரப்பு விடயங்களையும் உயர்ஸ்தானிகர் அரிபுல் இஸ்லாமுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

தெற்காசிய பிராந்தியத்திலான வர்த்தகத்தின் பரந்த திறனைக் கருத்தில் கொண்டு, பங்களாதேஷ் உயர்தர ஆடைகளைத் தயாரிப்பதில் முதலிடம் வகிப்பதனால், சர்வதேச மற்றும் பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களில், குறிப்பாக ஆடைத் துறையில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைத்தார்.

வரவிருக்கும் ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்வதையும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடுவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.