இன்று மாலை இலங்கை வருகிறார் பாக். பிரதமர்

இன்று மாலை இலங்கை வருகிறார் பாக். பிரதமர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (23) செவ்வாய்க்கிழமை பி.ப 4.15 மணியளவில் இலங்கை வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார்.

அதனையடுத்து விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமருடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையையடுத்து அலரி மாளிகையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் முன்னிலையில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தையுடன் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானதொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவிருந்த நிலையில் அது பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் பாகிஸ்தான் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகவும் இவ் வருடத்தில் இலங்கைக்கு சர்வதேச தலைவர் ஒருவர் விஜயம் செய்யும் முதல் முறையாகவும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.