தங்கம் கடத்த முயற்சித்த எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

தங்கம் கடத்த முயற்சித்த எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

றிப்தி அலி

பாராளுமன்ற சிறப்புரிமையினைப் பயன்படுத்தி சுங்க கட்டளைச் சட்டத்தினை மீறி விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் பிரிவின் ஊடாக நாட்டுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தங்கம் கடத்த முயற்சித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள விடயம் நேற்று (25) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சபை முதல்வாரன கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் கடத்தல் முயற்சி தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.வீ.எஸ்.சீ. நொனிஸ் மூன்று பக்க கடிதமொன்றினை கடந்த ஜுன் 14ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றும் இக்கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக சாட்சியளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நேற்று வெள்ளிக்கிழமை சபை முதல்வர் விசேட அறிவிப்பொன்றினை பாராளுமன்றத்தில் மேற்கொண்டதுடன் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு விரிவாக ஆராய்ந்து அறிக்கையொன்றினை சமர்ப்பிக்கும் என்று உறுதியளித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக 60 வயதான அலி சப்ரி றஹீம் தெரிவு செய்யப்பட்டார்.

வணிக முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரியான இவர், பிரபல வர்த்தகராவார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை நடத்தி வருகின்ற இவருக்கு டுபாயில் அலுவலகமொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக உப்பு உற்பத்தி, இறால் பண்ணை போன்ற பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான இவர், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததை அடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார்.

D5658824 எனும் இலக்க இராஜதந்திர கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள இவர், கடந்த மார்ச் மாதம் முதல் மே 28ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் ஏழு தடவைகள் டுபாய் சென்று வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த மே 23ஆம் திகதி ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகள் ஆகியவற்றினை பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சித்த போது இவர் சுங்கத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

அலி சப்ரி றஹீமின் இச்செயற்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றத்தில் வலுப்பெற்றது. அவரின் கடத்தல் செயற்பாடு காரணமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனினும், ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த விடயத்தில் அமைதி காத்தது. இவ்வாறான நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்காவினை வெளியேற்றுவதற்காக அரசாங்கத்தினால் கடந்த மே 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராகவே அலி சப்ரி றஹீம் வாக்களித்தார்.

"நான் கஷ்டமொன்றினை முகங்கொடுத்த போது என்னைக் காப்பற்ற ஜனாதிபதியோ, பிரதமரோ முன்வராமையின் காரணமாக இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்" என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தங்கம் கடத்த முயற்சித்த போது கைது செய்யப்பட்டதையே தான் முகங்கொடுத்த கஷ்டம் என பாராளுமன்ற உறுப்பினர் இங்கு குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த ஜுலை 1ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரரேணைக்கு ஆதரவளித்தமை குறிப்பிடதத்க்கது.

இதேவேளை, பாராளுமன்ற சிறப்புரிமையினை துஷ்பிரயோகப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து கடந்த மே 25ஆம் திகதி கடிதமொன்றினை சபாநாயகரிடம் கையளித்தனர்.

பாராளுமன்றத்திற்கு அவப்பெயரினையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தியமையினால் அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுமாறும் இக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கமும் பாராளுமன்ற உறுப்பினரின் கடத்தல் முயற்சி தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதேவேளை, பாராளுமன்ற சிறப்புரிமையினை மீறிய அலி சப்ரி றஹீமிற்கு எதிராக ஏன் சட்டத்தினை நிலைநாட்ட முடியாதுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஜுன் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இந்த விடயம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் கடந்த ஜுன் 07ஆம் திகதி கோரியிருந்தார்.

இதற்கான முழு அறிக்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இன்று வரை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமிற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் சபாநாயகரினால் எடுக்கப்படவில்லை.

பல கோடி ரூபா மதிப்புள்ள பொருட்களை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சிக்கின்ற சமயத்தில் அதனை சுங்கத் திணைக்களம் கண்டறிந்தால் அபராதம் விதிக்கப்படுவது வழமையாகும். இந்த அபராதத் தொகை செலுத்தப்பட்டால் குறித்த விடயம் விமான நிலையத்தினுள்ளே நிறைவடைந்துவிடும்

அபாராதத் தொகை செலுத்தப்படாவிட்டால் மாத்திரமே அது நீதிமன்றம் வரை செல்வது வழமையாகும். ஆனால், அலி சப்ரி றஹீம் விவகாரம் முற்றிலும் வித்தியாசமானதாகும்.

அவர் தனது பாராளுமன்ற சிறப்புரிமையினை பயன்படுத்தி, சுங்கத் திணைக்களத்தின்  பரிசோதனையைத் தவிர்த்து நாட்டுக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்த முயற்சித்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுங்கப் பிரிவின் வருமான செயற்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற விசேட தகவலின் அடிப்படையிலும், நீண்ட கால கண்காணிப்பு மற்றும் விமானப் பயணத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் சுங்கத் திணைக்களச் சட்டத்திலுள்ள சரத்துக்களின் அடிப்படையிலும் கடந்த மே 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமினை விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் பிரிவில் வைத்து சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இதன்போது மூன்று கிலோ 397 கிராம் மற்றும் ஏழு மில்லி கிராம் நிறையுடைய  தங்கம் அவரது கைப்பயிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக Samsung, Xiaomi மற்றும் Redmi ஆகிய வகைகளைச் சேர்ந்த 91 புதிய கையடக்கத் தொலைபேசிகளும் எடுக்கப்பட்டன.

Fly Dubaiயின் FZ547 எனும் இலக்க விமானத்தில் கடந்த மே 23ஆம் திகதி முற்பகல் 9.25 மணிக்கு டுபாயிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவரின் நடவடிக்கைகளை சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

கைப்பையொன்றுடன் விமானத்தில் இருந்து இறங்கிய பாராளுமன்ற உறுப்பினர், விமான நிலையத்திலுள்ள பிரபுக்கள் முனையத்தின் Crystal Lounge இற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து மேலும் சில பெட்டிகள் விமான நிலைய ஊழியரொருவரினால் இவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகளில் உள்ளவற்றினை எழுத்து மூலம் பிரகடனப்படுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியேற பாராளுமன்ற உறுப்பினர் முயற்சித்துள்ளார்.

இதன்போதே சுங்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இதற்கான விளக்கத்தினை வழங்குமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கோரி விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதன்போதே, பாராளுமன்ற உறுப்பினரின் கையிலிருந்த கைப் பையில் தங்கமும், விமான நிலைய ஊழியரினால் கையளிக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் கையடக்க தொலைபேசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, N10396987 எனும் கடவுச்சீட்டினைக் கொண்ட அலி சப்ரி றஹீமின்   உதவியாளரான எம்.எம். பைரூனும் இவர் பயணித்த விமானத்திலேயே நாட்டுக்கு வந்துள்ளார். இவர், 19 கையடக்க தொலைபேசிகளுடன் விமான நிலையத்தின் Green Channelஇன் ஊடாக வெளியேறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் சுங்கத் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட 828 கிராம் தங்கத்திற்கான ஆவணமும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், பைரூனினால் பிரகடனப்படுத்தப்பட்ட தங்கத்தினை பாராளுமன்ற உறுப்பினர் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 515 கிராம் மற்றும் 9 மில்லி கிராம் தங்கத்திற்கான எந்தவித ஆவணங்களும் அவரிடமில்லை.

இதனால், பாராளுமுன்ற சிறப்புறுமையினை பயன்படுத்தி விசேட அதிதிகள் பிரிவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசியினை கடத்த  முயற்சித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு கோடி 40 இலட்சத்து 96 ஆயிரத்து 990 ரூபா பெறுமதியான தங்கமும், 42 இலட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தொலைபேசிகளுமே இவரினால் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுங்க கட்டளைச் சட்டம், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கீழ் அனைத்து கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேவேளை, சுங்க கட்டளைச் சட்டத்தின் 129 மற்றும் 163 ஆகிய பிரிவுகளின் கீழ் 7.4 மில்லியன் ரூபா தங்கத்திற்கான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. குறித்த தண்டப்பணத்தினை அன்றே செலுத்தியமையினால் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் உதவியாளரிடம் காணப்பட்ட கையடக்க தொலைபேசிகளும் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 305 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணத்தினை செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.