கங்காராமை விகாரை, புனித.அந்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்

கங்காராமை விகாரை, புனித.அந்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்

இலங்கை மற்றும் இந்திய மக்களின் ஆரோக்கியம் சமாதானம் மற்றும் செழுமை ஆகியவற்றுக்காகவும் அவர்களின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்காகவும் புத்த பெருமானை வழிபாடு செய்வதற்காக இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள கங்காராமை விகாரைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்திய மக்களின் அன்பளிப்பான ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுடன் விசேட விமானம் ஒன்றில் மே 8ஆம் திகதி கொழும்புக்கு வருகை தந்திருந்த அவர் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றியதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

கங்காராமை விகாரையில் கலாநிதி கிரிந்தே அசாஜி தேரரினால்  உயர் ஸ்தானிகர் வரவேற்கப்பட்டதுடன் 2017 இல் நடைபெற்ற   சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த விகாரைக்கு வருகை தந்தமையையும் நினைவு கூர்ந்த அவர், விகாரையில் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  அந்த விஜயத்தின் புகைப்படங்களையும் உயர் ஸ்தானிகருக்கு  காண்பித்தார். 

தொடர்ந்து   புத்தபெருமான் ஞானம் பெற்ற இந்திய மண்ணில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை   தொடர்பாக கூறியிருந்த கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர், இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினர்.

உயர் ஸ்தானிகரை ஆசீர்வதித்து அவரது கையில் பிரித் நூல் ஒன்றையும் அவர் அணிவித்திருந்தார். இலங்கையுடனான பன்முக உறவுகளை, குறிப்பாக வரலாற்று மற்றும் நாகரீக உறவுகள்,  மத மற்றும் கலாசார உறவுகள் உள்ளிட்டவற்றை, மேலும் வலுப்படுத்துவதில் இந்திய தலைமைத்துவத்தின் தீவிரமான ஈடுபாட்டினையும் உயர் ஸ்தானிகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உயர் ஸ்தானிகர் அவர்கள் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அந்த தாக்குதலின் பின்னர் இந்திய பிரதமர் மோடி கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் வகையில் இலங்கைக்கான  விஜயத்தை மேற்கொண்டு   குறித்த தேவாலயத்திற்கு சென்றிருந்தமையை  நினைவு கூர்ந்த உயர் ஸ்தானிகர், இரு நாடுகளினதும் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பிரார்த்தித்தார்.

இத்தேவாலயத்தின் நிர்வாகியான வணக்கத்துக்குரிய அருட் தந்தை ஜூட் ராஜ் அவர்கள் இரு நாடுகளினதும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஆசீர்வதித்ததுடன் இரு அயல் நாடுகளினதும் நட்புறவை மேலும் வலுவாக்கும் இலக்கினை உயர் ஸ்தானிகர் வெற்றிகொள்ள வேண்டுமெனவும் அவருக்கு ஆசி வழங்கியிருந்தார்.

மக்களிடையேயான தொடர்பினை வலுப்படுத்துதல் உள்ளிட்ட சகல தரப்பு ஒத்துழைப்புக்களையும் இலங்கையுடன் வலுவாக்குவதில் இந்தியாவின் தீவிரமான ஈடுபாட்டினை உயர் ஸ்தானிகர் மீள வலியுறுத்தினார்.